நான் சூத்திரன், பறையர்களும், மீனவர்களுமே என் குருக்கள்!
-சாவித்திரி கண்ணன்

’இப்படியும் ஒரு மனிதர் வாழ்ந்திருப்பாரா?’ என வியக்கத்தக்க வாழ்க்கை வாழ்ந்தவரே பாரதியார். பாரதியாரின் கவிதைகள் எவ்வளவு உன்னதமானவைகளோ, அதைக் காட்டிலும் அவர் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் உன்னதமானது; ஆச்சரியங்கள் நிறைந்தது, வசீகரமானது, பின்பற்றத்தக்கது;
நினைவு நாள் என்பதற்காக பாரதியை எழுதவில்லை.
நாளும் அவரை நினைவு கூர்கிறேன். பாரதி கவிதைகளையோ, அவரைப் பற்றிய வரலாற்று செய்திகளையோ நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசித்து புத்துணர்ச்சி பெற்று என்னை புதுப்பித்துக் கொள்வேன்.
ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறை தோன்றும் அபூர்வக் கவிஞன் பாரதி!
எத்தனை முறை வாசித்தாலும், தெவிட்டாத தீந்தமிழ்த் தேனல்லவா, பாரதியின் கவிதைகள்!
சக மனிதர்களை மாத்திரமின்றி, சகல ஜீவராசிகளையும், ஏன் ஜடமாகத் தெரியும் இந்த பிரபஞ்சத்தையும் கூட எந்த பேதமும் இன்றி நேசித்தவன் பாரதி.

பாரதியால் மட்டுமே எல்லையில்லா பேரன்பை பொழியும் இந்த கவிதையை எழுத முடியும்;
காக்கை குருவி எங்கள் ஜாதி; நீள்
கடலும், மலையும் எங்கள் கூட்டம்.
நோக்குந் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை!
நோக்க, நோக்கக் களியாட்டம்!
என்பதாக கண்ணில் காணும் காக்கை,குருவி போன்ற ஜீவராசிகளை மாத்திரமின்றி, ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையே தனக்குள்ளிருக்கும் அம்சமாக உணர்ந்தவன் பாரதி.
அப்பேற்பட்ட அற்புத பிறவியான பாரதியை அக்கிரஹாரத்தில் பிறந்தவன் என்ற காரணத்தால் அவதூறு செய்வோரை என்னென்பது?
அதுவும் பெரியாரிய பார்வையில் பார்ப்பதாகக் கூறி பாரதியை பழிப்பவர்களுக்கு நான் பதில் சொல்வதைக் காட்டிலும், பெரியாரை பெரிதும் நேசித்த பாரதிதாசனே பலமுறை பதில் சொல்லி உள்ளார்.
பாரதியாரை மட்டும் நான் பார்த்திராவிட்டால் கடவுளர் துதிபாடும் கவிஞனாகவே என் வாழ்க்கை சென்று முடிந்திருக்கும். நான் புரட்சிக் கவிதைகள் எழுதக் கற்றுக் கொண்டதே அவரிடம் தான். பாரதியாரிடத்தில் பார்ப்பனத் தன்மை எள்ளவும் கிடையாது. பெரியாருக்கும் முன்பே சாதிவேரை பொசுக்குங்கள் என்றவர் பாரதியாரே…என பாரதிதாசன் கூறி இருக்கிறார்.

பாரதியாரைப் பற்றி அவரோடு பத்தாண்டுகள் மிக நெருங்கி பழகிய பாரதிதாசனால் மட்டுமே இவ்வளவு துல்லியமாக படம் பிடித்துக் காட்ட முடியும் என்பதற்கு இன்னொரு கவிதை.
தமிழகம் தமிழுக்கு தகும் உயர்வளிக்கும்
தலைவனை எண்ணி தவங்கிடக்கையில்
இலகு பாரதி புலவன் தோன்றினான்.
பைந்தமிழ் தேர்பாகன். அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்கு தந்தை!
திறம்பாட வந்த மறவன். புதிய
அறம்பாட வந்த அறிஞன். நாட்டிற்
படரும் சாதிப் படைக்கு மருந்து!
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்;
அயலார் எதிர்ப்புக்கு அணையா நெருப்பவன்;
என்னென்று சொல்வேன், என்னென்று சொல்வேன்.
புதுச்சேரியில் பாரதியை தன் தந்தை போல பாவித்து, அவரோடு நெருங்கி பழகிய பக்கத்து வீட்டு யதுகிரி என்ற தகவல்களைத் தருகிறார்.
பாரதியாருக்கு கர்நாடக சங்கீத கச்சேரிகளைக் காட்டிலும் பாம்பாட்டி, வண்ணான், நெல்குத்தும் பெண்கள், மீனவர்கள், உழவர் இவர்களுடைய நாடோடி பாட்டுக்கள் என்றால் மிகவும் இஷ்டம். ஒரு நாள் எங்கள் குடும்பமும், பாரதியார் குடும்பமுமாக எட்டு பேர் புதுச்சேரி கடற்கரைக்கு சென்றோம். அப்போது மீனவர்கள் சந்தோஷமாக பாடியபடி தோணியை கரையேற்றிக் கொண்டிருந்தைப் பார்த்த பாரதியார் சபாஷ் சொல்ல ஆரம்பித்தார்.
”அந்த மீனவர்கள் பாடியது எங்கள் யாருக்குமே புரியவில்லை. நீங்க என்ன இவ்வளவு மெச்சுகிறீர்களே அவர்களை” என்றேன் நான்.
அப்போது பாரதியார் மனைவி செல்லம்மாள், ”யதுகிரி பாரதியார் சுபாவம் உனக்கு தெரியாதா? வீதியில் மாரியம்மனை எடுத்துக் கொண்டு குடியானவர்கள் உடுக்கை அடித்துக் கொண்டு வந்தால் இவர் கூத்தாடுகிறார். தன் நினைவே இருக்காது. இப்ப கடற்கரையில் மாலை நேரம். தாளம் போடும் அர்த்தமில்லாத பாட்டு. கேட்கவும் வேண்டுமா?” எனச் சொல்லி சிரிக்கிறார்.
உடனே பாரதி எழுந்தார். ஒரு பென்சில், காகிதம் எடுத்துக் கொண்டு அந்த மீனவர்களிடம் சென்றார். அவர்கள் பாடுவதை அடியடியாக சொல்லச் சொல்லி கேட்டு எழுதி , அதில் இருக்கும் பிழைகளை திருத்திக் கொண்டு எங்களிடம் வந்தார். ”நீங்க எல்லோரும் என்னை கேலி செய்தீர்களே… இந்த பிரபஞ்சத்தில் அடிப்படையை அந்த மீனவன் எனக்கு உபதேசம் செய்தான்” என்றார்.
அதற்கு அவரது மனைவி செல்லம்மாள் சிரித்தபடி, ”நீங்கள் பறையன் முதல் மீனவன் வரையில் எல்லோருக்கும் சிஷ்யர் தான். ஆனால், முதல் தெய்வமாகிற மடத்து குருவுக்கு மாத்திரம் சிஷ்யர் அல்ல’’ என்கிறார். (இந்த காலகட்டத்தில் சிருங்கேரி சங்கராச்சாரியாரைத் தான் தென் இந்திய பிராமணர்கள் அனைவரும் தெய்வமாக வணங்கி போற்றினார்கள்)

”இதோ பார் செல்லம்மள், அர்த்தமில்லாத மூட வழக்கத்தை எனக்கு சொல்லாதே. இந்த சாரமில்லாத, உண்மையில்லாத விஷயத்தை என் உயிர் போனாலும் நம்ப மாட்டேன். மீனவன் அவன் தொழில் செய்தாலும், அவன் உயிரும் என் உயிரும் ஒன்றே…! இந்த ஏலேலோ பாட்டில் பாரதம், புராணம், தத்துவம் எல்லாம் புதைந்து கிடக்கு. உங்களுக்கு அனுபவிக்கத் தெரியவில்லை” என்றாராம்.
இந்த சம்பவம் ஒன்றே போதும், பாரதியின் உண்மையான இயல்பைச் சொல்ல!
பாரதியார் வாழ்ந்த காலத்தில் பார்ப்பனர்கள் தாழ்த்தப்பட்டவர்களை தூரத்தில் நிறுத்தியே பேசுவார்கள். ஆனால், பாரதியார் அவர்களை தன் இல்லத்திற்கு அழைத்து விருந்துண்ண வைத்து மகிழ்வதும், அவர்களின் இல்லங்களுக்கு சென்று கஞ்சி வாங்கி குடித்து மகிழ்வதுமாக வாழ்ந்துள்ளார் என்பதற்கு அவருடன் பழகிய பலர் பதிவு செய்துள்ளனர்.
மேலும் பாரதியார் அந்த காலத்தில் வாழ்ந்த மற்ற பிராமணர்களை போல பூணூல் போட்டுக் கொள்ளவில்லை. குடுமி வைத்துக் கொள்ளவில்லை. பிராமணச் சடங்குகளான அக்னிஹோத்திரம், ஜபம், ஹவிர்பாகம், ஒளபாஸனம் போன்ற எதையும் செய்யாமல் தவிர்த்தார். இதனால் உறவினர்களால் பழிக்கப்பட்டார்.
இது குறித்து பாரதியார் மனைவி செல்லம்மாள் வருத்தமாகக் கூறுகையில், பதிலுக்கு பாரதியார், ”நான் சூத்திரன், இந்த வீட்டின் எஜமானன் சூத்திரன், ஆனால், எஜமானி நீயோ பிராமணத்தி. எங்காவது இது உண்டோ…? நீயும் மாறலாமே” என மனைவியிடம் வாதம் செய்வாராம்!
”மகளுக்கு திருமண வயதாகிவிட்டது. வரன் தேடாமல் கவிதை பாடிக் கொண்டே இருக்கிறீர்களே” என செல்லம்மாள் பாரதியிடம் கேட்ட போது, தன் மகள் தங்கம்மாவையும் பக்கத்தில் வைத்துக் கொண்டே பாரதியார் இவ்விதம் கூறியுள்ளார்; ”காதல் மணம் தான் சிறந்தது. நான் என் பெண்ணை இன்னாரைத் தான் நீ கல்யாணம் செய்து கொள் என வலியுறுத்தமாட்டேன். அவளே வரன் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதைப் பற்றி பாரதிதாசனிடம் பேசிய பாரதியார், ”என் பெண் ( தங்கம்மாள்) வேறொரு தாழ்த்தப்பட்ட இளைஞனோடு ரங்கோனுக்கு ஓடிப் போய் அங்கிருந்து எனக்கு அப்பா நான் இன்னாரோடு இங்கு சுகமாக இருக்கிறேன். அவரை நான் விரும்புகிறேன். மனம் செய்து கொள்ளப் போகிறேன் எனக் கடிதம் எழுத வேண்டும். அதைக் கண்டு நான் ஆனந்தப்பட வேண்டும்” என்று கூறியுள்ளதை பாரதிதாசனும் பதிவு செய்துள்ளார்.
ஆக, ஒவ்வொரு நிமிடமும் பாரதியார் தன்னை ஒரு பொது மனிதனாக உணர்ந்ததோடு, போலித்தனமின்றி உண்மையான பகுத்தறிவாளராக இருந்துள்ளார் என்பதற்கு இந்தக் கவிதையே சாட்சியாகும்.
உண்மையின் பேர் தெய்வமென்போம். –அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்.
உண்மைகள் வேதங்கள் என்போம்- பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்.
பாரதியாருக்கு கடவுள் நம்பிக்கை இருந்தது. ஆனால், அதைவிட அதிகமாக சக மனிதனையே தெய்வத்தின் அம்சமாக பார்க்கும் குணமும் இருந்தது!
வாழ்க பாரதியார் புகழ்!
வளர்க, அவர் காட்டிய வாழ்க்கை நெறிகள்!