தீண்டாமைக்கு எதிரான 1966 ஒக்ரோபர் 21 எழுச்சியின் வரலாறும் பின்னணியும்
-கலியுகன்

பகுதி – 1
இலங்கையின் வட பகுதியில் தீண்டாமைக்கு எதிராக 1966 ஒக்ரோபர் 21இல் ஏற்பட்ட மக்கள் எழுச்சியின் 60ஆவது ஆண்டு நிறைவை இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள தமிழ் முற்போக்கு சக்திகள் நினைவு கூர்ந்து கொண்டாடியுள்ளனர். இந்த நினைவு கூரல்கள் இலங்கைத் தமிழ் சமூகத்தில் இன்னமும் மிச்ச மீதியாகவுள்ள முற்போக்கு சக்திகளின் குரலை மீண்டுமொருமுறை ஒலிக்க வைத்துள்ளது.
அதே நேரத்தில், வழமைபோல, இந்த எழுச்சி குறித்து பல உள்நோக்குடன் கூடிய கருத்துக்களும், தவறான தகவல்களும் முன் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான தவறுகளைச் செய்தவர்களில் இந்தப் போராட்டம் நடைபெற்ற காலத்தில் பிறந்திருக்காதவர்களும் இந்தப் போராட்டத்தில் எள்ளவும் பங்கேற்காதவர்களும் மட்டுமின்றி, இந்தப் போராட்ட காலத்தில் வாழ்ந்து அதில் பங்கேற்ற சிலரும் கூட அடங்குவர்.
எனவே, இந்தப் போராட்டத்தில் நேரடியாகப் பங்கேற்றவன் என்ற வகையில், இந்தப் போராட்டம் பற்றிய உண்மையான வரலாற்றையும், இந்தப் போராட்டம் ஏற்பட்டதற்கான அன்றைய களச் சூழலையும் உண்மைகளின் அடிப்படையில் வெளிக்கொணர வேண்டும் என்பதற்காகவே நான் இந்தக் கட்டுரையை எழுத எண்ணினேன்.
சாதிய ஒடுக்குமுறை
இலங்கையின் வட பகுதியில் சாதியமைப்பும் அதன் அடிப்படையில் எழுந்த கடுமையான தீண்டாமைக் கொடுமைகளும் எப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்து வந்ததோ, அதேபோல, அதற்கெதிரான போராட்டங்களும் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. எனவே, ஒரு வகையில் முன்னைய போராட்டங்களின் தொடர்ச்சியே 1966 ஒக்ரோபர் 21 எழுச்சி எனக் கூறலாம்.
அதே நேரத்தில், முன்னைய போராட்டங்களுக்கும், 1966 ஒக்ரோபர் 21 எழுச்சிக்குப் பின்னர் உருவான போராட்டங்களுக்கும் சில அடிப்படை வேறுபாடுகளும் உள்ளன. அதாவது, முன்னைய போராட்டங்கள் சாத்வீக வழியிலும், மத மாற்ற அடிப்படையிலுமே (சில தாழ்த்தப்பட்ட மக்கள் பௌத்த மதத்தை தழுவியமை) நடைபெற்று வந்தன.
ஆனால், 1966 ஒக்ரோபர் 21 எழுச்சிக்குப் பின்னரான போராட்டங்கள் புரட்சிகரமான முறையில், அதாவது சாதி வெறியர்களின் எதிர்ப்புரட்சி வன்முறைக்கு பதில் புரட்சிகர வன்முறை என்ற அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டது. அந்த வடிவ மாற்ற வழிமுறைக்குக் காரணம், புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சி ஒன்று அந்தப் போராட்டத்துக்கு தலைமை ஏற்றிருந்தமையாகும். அதன் காரணமாகவே, இந்தப் போராட்டம் கணிசமான வெற்றியை ஈட்டக் கூடியதாகவும் இருந்தது.
இலங்கையின் வட பகுதியில் சாதியமைப்பு நீண்ட காலமாக கட்டிக் காக்கப்படுவதற்கு ஏதுவாக அமைந்தது, அங்கு வாழ்ந்த சுமார் 5 இலட்சம் தாழ்த்தப்பட்ட மக்களும் பொருளாதார ரீதியாக உயர் சாதி சமூகத்தினரில் தங்கி வாழ்ந்தமையும் பிரதான காரணிகளில் ஒன்றாகும்.
அன்றைய காலகட்டத்தில் அங்கு வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்களில் ஒரு பிரிவினரின் பிரதான தொழிலாக இருந்தது கள்ளுச் சீவுதலாகும். இந்தக் கள்ளு இறக்குவதற்கான பனை, தென்னை என்பன உயர் சமூகத்தினரிடம் மட்டுமே இருந்தன. அந்த மக்களில் இன்னொரு சாரார் விவசாயக் கூலிகளாக இருந்தனர். அவர்களுக்கு என்று சொந்தமாக விவசாய நிலங்கள் இல்லாமையால், உயர் சமூகத்தினரின் நிலங்களிலேயே அவர்கள் கூலிகளாக வேலை செய்தனர்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கென சொந்தமாக உணவகங்கள், கிணறுகள், பாடசாலைகள், கோயில்கள், போக்குவரத்துச் சாதனங்கள், வைத்தியசாலைகள், மயானங்கள் என்பன இல்லாமையால், அது சம்பந்தமான தேவைகளுக்கும் உயர் சமூகத்தினரின் தயவையே நாட வேண்டி இருந்தது.
அது மாத்திரமின்றி, வடக்கில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சொந்தமாக ஒரு துண்டு நிலம் கூட இல்லாமல் இருந்ததால், அவர்கள் உயர் சமூகத்தினர் வழங்கிய நிலத் துண்டுகளிலேயே சிறு ஓலைக் குடிசைகளை அமைத்து வாழ வேண்டிய நிலையில் இருந்தனர்.
தாழ்த்தப்பட்ட மக்கள் உயர் சமூகத்தினரின் – குறிப்பாக சமூகத்தின் மேல்தட்டில் இருந்த வெள்ளாள சாதியினரின் – சாதிய ஒடுக்குமுறைக்கும், தீண்டாமைக் கொடுமைகளுக்கும் உள்ளாகி வந்தது மட்டுமின்றி, பொருளாதாரச் சுரண்டலுடன் பாலியல் சுரண்டலுக்கும் கூட உள்ளாகி வந்தனர்.
புதிய சூழலும் 1966 ஒக்ரோபர் 21 ஊர்வலத்துக்கான பின்னணியும்
இலங்கையின் வட பகுதியில் சாதியமைப்பும் அதன் வழிவந்த தீண்டாமையும் கோரத்தாண்டவம் ஆடி வந்தாலும், அது ஒரு பெரும் மோதலாக வெடித்தது கிடையாது. தாழ்த்தப்பட்ட மக்களில் சிலர் தமக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு எதிராக அவ்வப்போது தன்னெழுச்சியான சில நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டு வந்தனர்.
இத்தகைய ஒரு சூழ்நிலையில்தான், 1965 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் ஏழு கட்சி கூட்டரசாங்கம் ஒன்று பதவிக்கு வந்தது. இந்த அரசாங்கத்தில் தமிழர்களின் பிரதான கட்சிகளான தமிழரசுக் கட்சியும், தமிழ் காங்கிரஸ் கட்சியும் பங்காளிகளாகச் சேர்ந்து கொண்டனர்.
இந்த இரண்டு கட்சிகளும் பாரம்பரியமாக தமிழ் மேட்டுக்குடி உயர்சாதி குழாமின் நலன்களைப் பாதுகாக்கும் கட்சிகள் என்றபடியால், இவர்கள் ஆட்சியில் பங்கேற்றதும் உற்சாகம் அடைந்த உயர்சாதி வெறியர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தமது ஒடுக்குமுறையை மேலும் வலுவாக்கத் தொடங்கினர். இதன் ஒரு வெளிப்பாடாக தாழ்த்தப்பட்ட மக்கள் – குறிப்பாக இளைஞர்கள் – மீது தாக்குதல்கள் ஆங்காங்கே நடத்தப்பட்டன.
இந்தப் புதிய தாக்குதல்கள் சம்பந்தமாக ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கருதிய அச்சமூக செயற்பாட்டாளர்கள், அச்சுவேலியில் அமைந்திருந்த நல்லதம்பி என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரின் ‘லிபேர்ட்டி’ என்ற சினிமா கொட்டகையில் ஆலோசனைக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்தனர்.
இந்தக் கூட்டத்துக்கு தமிழ் அரசியல் கட்சிகள், இடதுசாரிக் கட்சிகள், தாழ்த்தப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய வெகுஜன அமைப்புகள் என்பனவற்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அந்தக் கூட்டத்தில் வட பகுதியில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் அன்றைய சூழ்நிலையில் எதிர்நோக்கிய பிரச்சினைகள் விரிவாக ஆராயப்பட்டதுடன், அந்தப் பிரச்சினைகளை சட்ட ரீதியாகவும், போராட்ட வழியிலும் அந்த மக்கள் எதிர் கொள்வதற்கு சகல அரசியல் கட்சிகளும், வெகுஜன அமைப்புகளும் உதவி செய்ய வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அந்த முடிவுக்கு சம்மதம் தெரிவித்துச் சென்ற பெரும்பாலான கட்சிகள் எதுவித நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.
இந்தச் சூழ்நிலையில்தான் அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இடதுசாரிக்கட்சிகளில் ஒன்றான சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி என்று அழைக்கப்படும் புரட்சிகர இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, தாம் இது சம்பந்தமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது.
தொடரும்…