மன்றோ கோட்பாட்டைத் தோற்கடித்த பிரேசில் மக்கள்

– க. ஆனந்தன்

1823 டிசம்பர் 2 அன்று அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் மன்றோ (James Monroe) ஒரு வெளியுறவுக் கொள்கையை அறிவித்தார். அமெரிக்கக் கண்டங்களில் எந்த நாட்டையும் ஐரோப்பிய நாடுகள் காலனியாக்கவோ, உள்விவகாரங்களில் தலையிடவோ கூடாது; மீறினால் அது அமெரிக்கா மீதான தலையீடாகக் கருதப்படும் என்பதே அது. நடைமுறையில் இது, கனடா முதல் சிலி வரை எல்லா நாடுகளிலும் அமெரிக்கா கணக்கற்ற முறை தலையிடுவதற்கே வழிவகுத்தது. இரண்டாம் முறை அதிபரான டொனால்ட் ட்ரம்ப், வெனிசுவேலாவில் அத்துமீறி இராணுவ நடவடிக்கை மேற்கொண்டபோது, இக்கோட்பாட்டை மீண்டும் அமுல்படுத்துவதாகவும், அது இப்போது “டான்றோ கோட்பாடு” (டொனால்ட் + மன்றோ) ஆகிவிட்டதாகவும் அறிவித்தார்.

பிரேசிலில் நேரடித் தலையீடு

ஒக்ரோபர் 24 அன்று ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியின்படி, அமெரிக்க வெளியுறவுத்துறையின் மேற்குலகப் பிரிவு மூத்த ஆலோசகர் டரைன் பெட்டியும், துணை உதவிச் செயலர் ரிக்கார்டா பீட்டாவும் பல மாதங்களாகப் பிரேசில் தேர்தலில் நேரடியாகத் தலையிட்டனர். பிரச்சாரம் தொடங்கும் முன்பே, ஜெயிர் போல்சானரோ(Jair Bolsonaro)வின் வெற்றியே அமெரிக்க அரசின் கொள்கை என்று பிரேசிலிலுள்ள தூதரக அதிகாரிகளுக்கு அறிவித்தனர். லூலா ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்ததற்காக ஜெயிர் சிறையிலடைக்கப்பட்டு, போட்டியிடத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதும், அவரது மகன் ஃபிளாவியோவை (Flávio Bolsonaro) ஆதரிக்க அதிகாரிகள் பணிக்கப்பட்டனர். அவருக்குத் தண்டனை விதித்த உச்சநீதிமன்ற நீதிபதிக்கு எதிரான தடைகள், பிரேசிலின் சில குழுக்களைப் பயங்கரவாதக் குழுக்களாக அறிவித்தது உள்ளிட்ட நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.

அமெரிக்காவின் முன்னணி ஏ.ஐ நிறுவனங்களும் களமிறக்கப்பட்டன. வாக்காளர்களைப் பட்டியலிட்டு, தேர்ந்தெடுத்தவர்களுக்குப் போலிக் கணக்குகள் வழியாகப் பொய்த் தகவல்களை உண்மை போலப் பரப்ப, பல இலட்சம் செலவிடப்பட்டது. லூலாவின் பக்கங்கள் முடக்கப்பட்ட அதே நேரத்தில், போல்சானரோ ஆதரவுப் பக்கங்களை மெட்டா ஊக்குவித்தது.

ஏன் இந்த ஆத்திரம்?

லூலா இடதுசாரி என்பதற்காக மட்டுமல்ல; ஒருதுருவ உலக அரசியலுக்கு மாற்றான பிரிக்ஸ் அமைப்பின் ஆரம்பகாலத் தூண்களில் ஒருவர் என்பதும் காரணம். போல்சானரோ மூலம் பிரேசிலை பிரிக்ஸிலிருந்து வெளியேற்ற அமெரிக்கா திட்டமிடுகிறது. லூலா கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி டில்மா ரூசெஃப், பிரிக்ஸ் வங்கியின் தலைவராக இருந்து, சர்வதேச வர்த்தகத்தில் டொலருக்கு மாற்று பற்றிப் பேசி வருகிறார். மின் கட்டமைப்பு, புனல் மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தி, ரயில், நெடுஞ்சாலை எனப் பிரேசிலைக் கட்டமைப்பதில் சீன முதலீடுகள் பிரம்மாண்டமாக உள்ளன; இதை அமெரிக்காவால் சகிக்க முடியவில்லை. அரிய கனிமங்களைச் சுரண்டவும் அமெரிக்கா திட்டமிட்டது. இரண்டாம் சுற்றுக்கு முன், பெட்ரோபாஸ் எண்ணெய் நிறுவனத்தைத் தனியார்மயமாக்குவதாக ஃபிளாவியோ உறுதியளித்தார்.

இஸ்ரேலை இனப்படுகொலைக்காக லூலா கடுமையாகச் சாடுகிறார். ஃபிளாவியோவோ இஸ்ரேலுக்கு ஆதரவாக, தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றுவதாக அறிவித்தவர். இஸ்ரேல் அரசும் தேர்தலில் தலையிட்டதாகத் தகவல்கள் உள்ளன.

தென், மத்திய அமெரிக்காவில் இடதுசாரிகளோ, தாராளவாதிகளோ கூட ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே அமெரிக்க நிலைப்பாடு. பெருவில் இடதுசாரி ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோ சட்டவிரோதமாக நீக்கப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். கொலம்பியாவில் பெட்ரோவுக்குப் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டது. கோஸ்டா ரிகா, பொலிவியா என்று இப்பட்டியல் நீளும்.

பின்னடைவிலிருந்து வெற்றி

முதல் சுற்றில் பின்தங்கிய லூலா, சுமார் 44 இலட்சம் வாக்குகளில் வென்றது எப்படி? வாக்குப்பதிவு சுமார் ஒரு சதவீதம் கூடியது; தொலைதூரப் பகுதி மக்கள் போல்சானரோ ஆட்சி வரக்கூடாது என்று திரண்டு வந்தனர். ஒரு படகில் சுமார் 1,000 பேர் வாக்குச்சாவடிக்கு விரையும் காணொலி சமூக ஊடகங்களில் உலவுகிறது. வலதுசாரிகள் ஆளும் நகரங்களில் பேருந்து சேவை வெட்டப்பட்டது; சாவோ பாலோவில் மட்டும் 40% பேருந்துகள் நிறுத்தப்பட்டன. வடகிழக்கில் லூலா தனது வாக்குகளை உயர்த்தினார்; தென்கிழக்கில் சாவோ பாலோ, ரியோ டி ஜெனிரோவில் இடைவெளியைக் குறைத்தார்.

இரண்டாம் சுற்றில் தனது சாதனைகளைப் பேசுவதை விடுத்து, குடும்பப் பொருளாதாரம், கடன்சுமை, விலைவாசி, வருவாய் குறித்து அடுத்த நான்காண்டுக்கான திட்டவட்டமான முன்வைப்புகளை வைத்தார். வாட்சப் குழுவான “லூலாவின் சேனை”, நாடாளுமன்ற உறுப்பினர் ஆந்த்ரே ஜனோன்ஸ் தலைமையில் பெரும் பங்காற்றியது.

போல்சானரோ தொலைக்காட்சி விவாதத்தில் அரசியலமைப்பை மீண்டும் திருத்துவேன் என்றதும், லூலாவை “ஒன்பது விரல்காரர்” என்று கேலி செய்ததும் அவருக்கே எதிராகத் திரும்பின. லூலா பதிலடி தந்தார்: “ஓம், எனக்கு ஒரு விரல் குறைவுதான். 19 வயதில் பாதுகாப்பற்ற தொழிற்சாலையில் வேலை செய்தபோது இழந்தேன். உங்களைப் போல் உழைக்காதவர்களால் அந்தக் கஷ்டத்தை உணர முடியாது.”

வாக்காளர் வரிசை நீண்டதால், இரு வேட்பாளர்களும் கோரியபடி உச்சநீதிமன்றம் வாக்குப்பதிவை இரண்டு மணி நேரம் நீட்டித்தது. தான் கோரிய அந்த நீட்டிப்பையே மறைத்து, தேர்தலை நிராகரிக்க வேண்டும் என்கிறார் போல்சானரோ.

எச்சரிக்கை மணி

பிரேசிலின் மிக அதிக சுவிசேஷகர்கள் வாழும் 200 நகராட்சிகளில் ஃபிளாவியோ 155-ஐ வென்றுள்ளார்; அவரது தந்தை 2022 இல் வென்றது 130. போதகர்கள் நம்பிக்கையாளர்களைத் திரட்டுகின்றனர்; வால்ஸ்ட்ரீட்டும் வாஷிங்டனும் நிதி திரட்டுகின்றன. தேர்தலில் தோற்றாலும் அமைப்பு அப்படியே பாதுகாக்கப்படுகிறது, இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ். போல். லூலா சந்திக்கவுள்ள சவாலாக இது இருக்கும்!

Tags: