செம்படையின் நெடும் பயணம் தொடர்கிறது – புதிய சாதனைகளைப் படைக்க ஜி ஜின்பிங் அழைப்பு
– சேது சிவன்

சீனச் செம்படையின் வரலாற்றுச் சிறப்புமிக்க “நெடும் பயணம்” (Long March) வெற்றி பெற்று 90 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, சீனாவின் “புதிய நெடும் பயணத்தில்” சவால்களையும் அபாயங்களையும்எதிர்கொண்டு புதிய சாதனைகளைப் படைக்க வேண்டும் எனச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், ஜனாதிபதியும், மத்திய இராணுவ ஆணையத் தலைவருமான ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார். பெய்ஜிங் மக்கள் மாமன்றத்தில் (Great Hall of the People) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றியஅவர், “வரலாற்றை நினைவில் கொள்வதன் மூலமே பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க முடியும். கடந்த காலத்தைத்திரும்பிப் பார்ப்பது, அதிலிருந்து ஆற்றல் பெற்று உறுதியுடன் முன்னேறவே” என்றார்.
பயணத்தின் பின்னணி
1934 இல் கோமிண்டாங் ஆட்சியின் ஐந்தாவது முற்றுகைத் தாக்குதலால் கியாங்சி, ஃபூஜியான் மாகாணங்களில் இருந்த முக்கியத் தளங்களைக் கம்யூனிஸ்ட் கட்சி இழந்தது. அதே ஆண்டு ஒக்ரோபரில் சுமார் 86,000 செம்படை வீரர்கள் யூடு ஆற்றைக் கடந்து பயணத்தைத் தொடங்கினர். இரண்டு ஆண்டுகளில், பத்துக்கும் மேற்பட்ட மாகாணங்களைக் கடந்து, காடுகளும் மலைகளும் பனியும் நிறைந்த பாதைகளில் 12,500 கிலோமீட்டர் நடந்தே சென்றனர். 10 இலட்சத்துக்கும் அதிகமான எதிரிப் படையினரின் முற்றுகையையும், பசியையும் தாகத்தையும் முறியடித்தனர். அமெரிக்கப் பத்திரிகையாளர் எட்கர் ஸ்னோ இதை “நவீன காலத்தின் இணையில்லா வீர காவியம்” என வர்ணித்தார்.

வெற்றியின் தூண்கள்
கம்யூனிஸ்ட் கட்சியின் சரியான தலைமை, மாவோவின் மையப் பொறுப்பு, மார்க்சியத் தத்துவத்தைச் சீன எதார்த்தத்தோடு இணைத்தது, மக்களின் ஆதரவு, உன்னத இலட்சியமும் களங்கமற்ற நம்பிக்கையும் கொண்ட செம்படை ஆகியவையே வெற்றிக்குக் காரணம் என ஜின்பிங் குறிப்பிட்டார். விசுவாசம், உண்மை, நீதி, ஒற்றுமை ஆகியவற்றின் ஆற்றலை வெளிப்படுத்தும் நெடும் பயண வீரம், எதிர்காலச் சவால்களைத் துணிவுடன் எதிர்கொள்ள ஊக்கமளிக்கும் விலைமதிப்பற்ற பொக்கிஷம் என்றும் அவர் கூறினார்.
இன்றைய வளர்ச்சிக்கான பாடங்கள்
நெடும் பயணத்தின் 90 ஆவது ஆண்டு வெறும் நினைவு நிகழ்ச்சி அல்ல; நவீனமயமாக்கல், அறிவியல் ஆராய்ச்சி, பசுமை ஆற்றல், இராணுவ வளர்ச்சி ஆகியவற்றுக்கு வழிகாட்டும் தத்துவம் எனச் சீனநிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். “பழைய நடைமுறைகள் புதிய சிக்கல்களுக்குப் பலன் தராதபோது, பிற நாடுகளைநகலெடுக்காமல் நம் யதார்த்தத்துக்கு ஏற்பத் தீர்வு காண வேண்டும் என்பதை நெடும் பயணம் உணர்த்துகிறது” என்கிறார்பெய்ஜிங் வனவியல் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் யாங் சே. சூழலுக்கேற்ற உத்திகளும், இராணுவத்தின் மீதுகட்சியின் முழுமையான தலைமையுமே வெற்றியைச் சாத்தியமாக்கின என்கிறார் இராணுவ நிபுணர் சாங் சோங்பிங்.

அறிவியலும் பசுமை ஆற்றலும்
போர்களும் மோதல்களும் தீவிரமடையும் சர்வதேசச் சூழலில், சீனாவின் அறிவியல் வளர்ச்சி கவனிக்கத்தக்கது. ஆராய்ச்சிக்கு மிக அதிக நிதி ஒதுக்கும் நாடுகளில் சீனா ஒன்று என்றும், காப்புரிமை விண்ணப்பங்களில் முதலிடத்தில் உள்ளது என்றும் “நேச்சர்” (Nature) இதழ் கூறுகிறது. “நேச்சர் இண்டெக்ஸ்” (Nature Index) தரவரிசையிலும் சீன நிறுவனங்களே முன்னிலையில் உள்ளன. அணுசக்தி, செயற்கை உயிரியல், செயற்கை நுண்ணறிவு மாதிரிகள், நிலவின் மறுபக்கத்திலிருந்து பாறை மாதிரிகளைக் கொண்டுவந்தது போன்ற சாதனைகள் வளர்ந்த நாடுகளையே வியக்க வைத்துள்ளன.
2026 இன் முதல் ஆறு மாதங்களில் சீனாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறன் 2.455 பில்லியன் கிலோவாட்டாக உயர்ந்து, மொத்த மின் உற்பத்தித் திறனில் 60.7 சதவீதத்தை எட்டியுள்ளது. ஜூலை இறுதியில், நிலக்கரியை விஞ்சிச் சூரிய ஒளி மின்சாரமே நாட்டின் மிகப் பெரிய மின் ஆதாரமாக மாறியது. செமிகண்டக்டர் தொழில்நுட்பத்திலும் சுயசார்பை நோக்கிச் சீனா முன்னேறுகிறது. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் இது உறுதியான பங்களிப்பு.

புதிய நெடும் பயணம்
“இந்தப் புதிய பயணத்தில் ‘இரண்டாவது நூற்றாண்டு இலக்கை’ அடைவதில் உறுதியாக உள்ளோம். சீனப் பாதையிலான நவீனமயமாக்கல் மூலம் சீனாவை அனைத்துத் துறைகளிலும் வலிமைமிக்க சோசலிச நாடாக மாற்றி, சீனத்தின் மறுமலர்ச்சியை முழுமையாக முன்னெடுப்பதே நோக்கம்” என ஜின்பிங் அறைகூவல் விடுத்தார். தரமான வளர்ச்சியும் நியாயமான பகிர்வும் இணைந்த பொருளாதாரம், அனைவருக்குமான பொது வளர்ச்சி, வளர்ச்சியையும் பாதுகாப்பையும் ஒருங்கிணைத்தல், ஆயுதப் படைகளை உலகத் தரத்துக்கு உயர்த்துதல், இராணுவத்தின் மீது கட்சியின் முழுமையான தலைமை, கட்சியின் கடுமையான சுய நிர்வாகம் ஆகிய வழிகாட்டுதல்களையும் அவர் அறிவித்தார்.