நவதாராளமயமும், முதலாளித்துவத்தின் அரசியல் திட்டமும்

-கே. ஹேமலதா

வதாராளமயம் என்பது முதலாளித்துவத்தின் ஒரு கட்டமாகும். இது, பொதுவான பேச்சுவழக்கில் தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் கொள்கைகளை உள்ளடக்கியது என்று கூறப்படுகிறது. இது 1970களின் நெருக்கடிக்கு முதலாளித்துவ வர்க்கத்தின் எதிர்வினையாகும். சோவியத் யூனியனின் வீழ்ச்சி மற்றும் 1990களில் சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, இது கிட்டத்தட்ட உலகம் முழுவதையும் ஆட்கொண்டுள்ளது. இருப்பினும், நவதாராளமயம் என்பது சந்தை பொருளாதாரத்தை தூய்மைப்படுத்திக் காட்டும் முதலாளித்துவ அமைப்பிற்குள் ஒரு கட்டம் மட்டுமல்ல; இது சந்தையின் மேலாதிக்கத்தையும், சமூகத்தின் அனைத்து அம்சங்களிலும் அதன் ஆதிக்கத்தையும், நிலைநிறுத்துவதற்கான ஒரு அரசியல் திட்டமும் ஆகும்.

முதலாளித்துவ வர்க்கம் தனது இலாபத்தை அதிகரிக்க, உற்பத்தித்திறனை அதிகரித்தல், இயந்திரமயமாக்கல், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், தொழிலாளர் ஊதியங்களைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் தொழிலாளி வர்க்கத்தின் மீதான சுரண்டலைத் தீவிரப்படுத்துவதன் மூலம் அதிக உபரி மதிப்பை ஈட்ட முயல்கிறது. நவதாராளமயத்தின் கீழ், முதலாளித்துவ வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசு, தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தொழிற்சங்கங்களாக ஒருங்கிணைக்கப்படுவதைத் தடுக்கும். அவர்களின் வாழ்வாதாரங்கள், வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகள் மற்றும் அவர்களின் அடிப்படை உரிமைகள், குறிப்பாக அவர்களின் அமைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கைக்கான உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான அவர்களின் எதிர்ப்பை ஒடுக்கும் கொள்கைகளை இயற்றுகிறது.

இந்த நடவடிக்கைகள் ‘தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள்’ என்று முன்வைக்கப்படுகின்றன. மேலும், அவற்றை எதிர்க்கும் தொழிலாளர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், முதலீட்டை ஈர்ப்பதற்கும் வேலைகளை உருவாக்குவதற்கும் தடைகளாக இருக்கும் ‘வளர்ச்சிக்கு எதிரானவை’ என்று தவறாக சித்தரிக்கப்படுகின்றன. ‘தொழில் செய்வதை எளிதாக்குவதற்கு’ வேலை செய்யும் இடங்களை ‘தொழிற்சங்கம் இல்லாததாக’ மாற்றுவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நவதாராளமயத்தின் கீழ், சட்டப் பாதுகாப்பு கொண்ட நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்படுகிறது. ஒப்பந்தத் தொழிலாளர்கள், அவுட்சோர்ஸ் தொழிலாளர்கள், தற்காலிகத் தொழிலாளர்கள், குறிப்பிட்ட காலத் தொழிலாளர்கள், பகுதி நேரத் தொழிலாளர்கள், பயிற்சி பெறுபவர்கள் போன்ற பல்வேறு வகையான நிரந்தரமற்ற தொழிலாளர்கள் நிரந்தர ஊழியர்கள் செய்யும் அதே வேலையைச் செய்யப் பயன்படுத்தப்படுகிறார்கள். ஆனால், நிரந்தரத் தொழிலாளர்களை விட மிகக் குறைந்த ஊதியத்தில், எந்த வேலைப் பாதுகாப்போ அல்லது சமூகப் பாதுகாப்போ இல்லாமல் இவர்கள் வேலை செய்கிறார்கள். சுரண்டலை அதிகரிப்பதோடு, இது தொழிலாளர்களிடையே பிளவுகளையும் உருவாக்குகிறது. அவர்கள் ஒன்றிணைவதற்கு ஒரு தடையாக செயல்படுகிறது. உள்ளூர் தொழிலாளர்களை நீக்கி புலம்பெயர் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் பிரித்து வைக்கப்படுகிறார்கள். மேலும், உள்ளூர் அல்லாதவர்களாக இருப்பதால் இவர்கள் குறைவான பேரம் பேசும் சக்தியைக் கொண்டுள்ளனர். உள்ளூர் மக்களுடன் பழகுவதற்கு மொழி ஒரு தடையாக செயல்படுகிறது. தவிர, உள்ளூர் மக்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை குறைந்த ஊதியத்தில் வேலை செய்யும் போட்டியாளர்களாகக் கருதுகிறார்கள். அவர்கள் தங்கள் வேலைகளைப் பறித்துவிட்டதாக நினைக்கிறார்கள். தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அவர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை.

உரிமைகளை விழுங்கிய தொழிலாளர் விதிமுறைகள்

ஏற்கனவே உள்ள 29 தொழிலாளர் சட்டங்களை விழுங்கிக் கொண்ட நான்கு தொழிலாளர் விதிமுறைகள் (Labour Codes), 2019-20ஆம் ஆண்டில் பாஜக தலைமையிலான அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. அவை உண்மையில் தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளான எட்டு மணி நேர வேலை நாள், குறைந்தபட்ச ஊதியம், பெண்களுக்கு சம ஊதியம், சமூகப் பாதுகாப்பு, வேலை செய்யும் இடப் பாதுகாப்பு போன்றவை, மிக முக்கியமாக, தொழிலாளி வர்க்கத்தின் அமைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கைக்கான உரிமை ஆகியவற்றைக் குறைப்பதற்கான முயற்சிகள் ஆகும். மேலும், அவை நவதாராளமய நிகழ்ச்சி நிரலின் ஒருங்கிணைந்த பகுதியும் ஆகும். தொழிற்சங்கங்களின் வலுவான எதிர்ப்பின் காரணமாக ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர் விதிமுறைகள் செயல்படுத்த முடியாமல் இருந்தது. பெருநிறுவன எஜமானர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய அவசரப்பட்ட மோடி தலைமையிலான அரசாங்கத்தால் நவம்பர் 2025 இல் செயல்பாட்டுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டன.

உற்பத்தி முறையில் அதன் நிலை காரணமாக, போராடிப் பெறப்பட்ட உரிமைகள் மற்றும் வேலை நிலைமைகள் தாக்கப்படும்போது, தொழிலாளி வர்க்கம் அமைதியான பார்வையாளராக இருப்பதில்லை. உலகம் முழுவதும் தொழிலாளி வர்க்கத்தின் அதிகரித்து வரும் போராட்டங்களிலிருந்து தெளிவாகத் தெரிவது போல, அரசு ஒடுக்குமுறை இருந்தாலும் சரி, தாக்குதல்களைச் சந்தித்தாலும் சரி, தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்கள் மற்றும் தங்கள் கூட்டு நடவடிக்கைகளின் மூலம் இந்தத் தாக்குதல்களை எதிர்க்கிறார்கள். நம் நாட்டிலும், தொழிலாளி வர்க்கம் நவதாராளமயத் தாக்குதலுக்கு எதிரான தனது எதிர்ப்பைத் தொடர்ந்தது. தொழிலாளர் விதிமுறைகளின் அறிவிப்புக்கு எதிராக பிப்ரவரி 12, 2026 அன்று ஒரு பெரிய நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்துடன் பதிலளித்தது. இந்த பொது வேலைநிறுத்தம் உழைக்கும் மக்களின் அனைத்துப் பிரிவினரிடமிருந்தும், குறிப்பாக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பிற வர்க்கங்களிடமிருந்தும், முன் எப்போதுமில்லாத பேராதரவைப் பெற்றது. ஆனால், பாஜகவின் சகோதர அமைப்பான, பாஜகவின் அரசியல் பிரிவுக்கு வழிகாட்டும் பாசிச ஆர்.எஸ்.எஸ். இன் தொழிற்சங்கப் பிரிவான பாரதிய மஸ்தூர் சங் (BMS), இந்த போராட்டம் ‘அரசியல் உள்நோக்கம் கொண்டது’ என்று கூறியது.

தொழிலாளர் விதிமுறைகள், இதுவரை முதலாளிகளின் சட்டவிரோதமாக மேற்கொண்டு வந்த செயல்களை சட்டப்பூர்வமாக்குவதோடு மட்டுமல்லாமல், 2023இல் பாஜக அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் பிரிவு 111, தொழிலாளர்களின் சட்ட உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான கூட்டு முயற்சிகளை ‘திட்டமிடப்பட்ட குற்றம்’ என்று கூறி தண்டிக்கப் பயன்படுத்தப்படுகிறது. தொழிற்சங்கத் தலைவர்கள் தங்கள் கோரிக்கைகளை தொழிலாளர் துறையிடம் எழுப்பியதற்காக பிணை கூட வழங்கப்படாமல் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஷ்ரம் சக்தி நிதி என்பது, தொழிலாளர் அமைச்சகம் ஆய்வுகள் மூலம் தொழிலாளர் சட்டங்களை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கு பதிலாக, “வேலைவாய்ப்பை” எளிதாக்கும் ஒரு அமைப்பாக ‘மறுசீரமைக்க’ முயல்கிறது.

நசுக்கப்படும் கருத்துரிமைகள்

தொழிலாளர்களும் அவர்களின் அமைப்புகளும் மட்டுமே ஒடுக்கப்படுவதில்லை. சந்தை சார்ந்த பொருளாதாரக் கொள்கைகளுக்கு எந்தவொரு கருத்து வேறுபாடும் அல்லது எதிர்ப்பும், சர்வதேச நிதி மூலதனத்தின் அழுத்தத்தின் கீழ் செயல்படும் நவதாராளமய அரசால் தாக்கப்படுகிறது. மாறுபட்ட அரசியல் சிந்தனைகளின் வெளிப்பாடுகளும், சமூகத்தின் வளர்ச்சிக்கான வெவ்வேறு பார்வைகள் குறித்த அரசியல் விவாதங்களும் அனுமதிக்கப்படுவதில்லை. அது தேச விரோதமானது என்று குற்றம் சாட்டப்படுகிறது. அரசின் பல்வேறு பிரிவுகளும், அமைப்புகளும், மாற்றுக் கருத்து முன்வைப்பவர்களை அச்சுறுத்தவும், ஒடுக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

அரசு ஒடுக்குமுறையைத் தவிர, முதலாளித்துவ வர்க்கங்கள் மதம், சாதி, பகுதி, மொழி போன்ற அடையாளங்களைப் பயன்படுத்தி பிளவுகளை ஆழப்படுத்தவும், தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளி மக்களின் பிற பிரிவினரின் கவனத்தை அவர்களின் அன்றாட பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்பவும், அவர்களின் பிரச்சினைகளை நவதாராளமயக் கொள்கைகளுடன் தொடர்புபடுத்துவதைத் தடுக்கவும் முயல்கின்றன. அடையாள அரசியல் மற்றும் வலதுசாரி சக்திகள் தொழிலாளி மக்களை தவறாக வழிநடத்த ஊக்குவிக்கப்படுகின்றன. நவதாராளமயக் கொள்கைகளை குற்றவாளியாகக் காட்டாமல், ‘மற்றவர்களை’ குற்றவாளிகளாகக் காட்ட முயற்சிக்கின்றன. கற்பனையான வரலாற்று அநீதிகளை சித்தரித்து, அதன் அடிப்படையில் தீவிர வெறி உணர்வு ஊக்குவிக்கப்படுகிறது. தங்கள் குறிக்கோள்களை அடைய முடியாமல் போனதற்கும், அவர்களின் மோசமான நிலைமைகளுக்கும் காரணம் புலம்பெயர்ந்தோர், மத சிறுபான்மையினர், தலித்துகள் போன்றவர்கள்தான் என்று சித்தரிக்கப்படுகிறது. தங்கள் மோசமான நிலைமைகளுக்கான உண்மையான காரணம், நவதாராளமயக் கொள்கைகள் என்பதை தொழிலாளி வர்க்கமும் மக்களும் புரிந்துகொள்வதைத் தடுக்க அவர்கள் முயல்கிறார்கள்.

கேலிக்கு ஆளாகும் தொழிலாளி வர்க்க அரசியல்

மக்களின் எரியும் பிரச்சினைகள் மற்றும் அரசாங்கங்களால் நிறைவேற்றப்படும் கொள்கைகளுக்கு இடையிலான தொடர்பை வெளிப்படுத்தும் தொழிலாளி வர்க்க அரசியல் கேலி செய்யப்படுகிறது; இழிவுபடுத்தப்படுகிறது. தொழிலாளர்கள் தங்கள் ஊதியம் அல்லது பிற பொருளாதாரப் பலன்கள் தொடர்பான கோரிக்கைகளை எழுப்புவதோடு நிறுத்திக் கொள்ளவும், அரசியல் கட்சிகளின் களமாக இருக்கும் ‘அரசியலில்’ ஈடுபட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆளும் வர்க்கங்களும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளித்துவக் கட்சிகளும் மட்டுமல்ல; சில தொழிற்சங்கங்களும் கூட, தொழிலாளர்கள் அரசியல் சார்பற்றவர்களாக இருக்க வேண்டும் என்றும், தொழிற்சங்கங்கள் கொள்கை தொடர்பான பிரச்சினைகளை எழுப்பக்கூடாது என்றும் வாதிடுகின்றன.

உலகம் முழுவதும், பாரம்பரிய இடதுசாரி கட்சிகள், சோசலிசக் கட்சிகள், தொழிலாளர் கட்சிகள் மற்றும் பிற சமூக ஜனநாயகக் கட்சிகள் முன்பு ஆக்கிரமித்த அரசியல் இடம் இப்போது வலதுசாரி மற்றும் நவபாசிச சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட முயல்கிறது. நவதாராளமயக் கொள்கைகளை வலுவாக எதிர்க்கத் தவறியதாலும், தொழிலாளி வர்க்கத்துடன் நிற்கத் தவறியதாலும் அல்லது அதிகாரத்தில் இருந்தபோது நவதாராளமயக் கொள்கைகளை செயல்படுத்தியதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நவதாராளமயக் கொள்கைகளின் தாக்கத்திற்கு எதிரான மக்களின் அதிருப்தியை வலதுசாரிகள் அதிகாரத்திற்கு வரப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அவர்கள் தொழிலாளர் சார்பு அல்லது மக்கள் சார்பு மாற்றை முன்வைப்பதில்லை. வலதுசாரி சக்திகள் உண்மையில் தொழிலாளர் விரோதப் போக்குடையவை. அவர்கள் அதிகாரத்திற்கு வந்தவுடன், அதே பெருநிறுவன சார்பு மற்றும் தொழிலாளர் விரோத நவதாராளமயக் கொள்கைகளை செயல்படுத்துகிறார்கள். வர்க்க அரசியலுக்கு பதிலாக, பிற்போக்கு அடையாள அரசியல் முன்னுக்கு வருகிறது.

நவ பாசிசத்தின் சுயரூபம்

நவதாராளமய அரசு இயல்பாகவே சர்வாதிகாரத்தனமானது. முதலாளித்துவ நெருக்கடி தீவிரமடையும்போது, அதன் பெருநிறுவன சார்பு மற்றும் பணக்கார சார்பு கொள்கைகளுக்கு எதிரான எதிர்ப்பை எந்த வகையிலும் ஒடுக்க துடிக்கிறது. மேலும், நவபாசிச சுயரூபத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்தியா உட்பட, இன்று உலகம் முழுவதும் வலதுசாரி சக்திகளின் வளர்ச்சியில் இந்த போக்குதான் காணப்படுகிறது.

சி.பி.ஐ(எம்)-இன் 24வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானம், பாஜக-ஆர்.எஸ்.எஸ். இன் கீழ் உள்ள தற்போதைய பெருநிறுவன-மதவாத கூட்டு ‘நவபாசிச குணாம்சங்களைக் காட்டுகிறது’ என்று கூறியுள்ளது. நம் நாட்டில் ‘நவபாசிசம் ‘ நம் கட்சித் திட்டத்தின்படி பாசிச தன்மை கொண்ட ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் இந்துத்துவ சித்தாந்தத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியின் கீழ் அதிகாரத்தை பயன்படுத்த முடிகிறது. இந்துத்துவ பிரிவினைவாத சித்தாந்தம், நவதாராளமய நெருக்கடி மற்றும் பெரு முதலாளித்துவத்தின் நலன்களுக்கு சேவை செய்ய எதேச்சாதிகாரத்தை திணிப்பது ஆகியவை அனைத்தும் ஒரு முன்-நவபாசிசத்தின் கூறுகளாகும்’ என்று கட்சி விளக்கியது. ஜனநாயகத்தின் முகமூடியைப் பராமரித்து வழக்கமான தேர்தல்களை நடத்தும் அதேவேளையில், ஆட்சி எதிர்ப்பை ஒடுக்க சர்வாதிகார நடவடிக்கைகளைப் பயன்படுத்துகிறது. எஸ்.ஐ.ஆர். செயல்முறை மூலம் லட்சக்கணக்கான மக்களை வாக்களிக்கும் உரிமையிலிருந்து விலக்குவதன் மூலம் மக்களின் அரசியலமைப்புச் சட்ட உரிமையான வாக்களிக்கும் உரிமையை ஒடுக்க தேர்தல் ஆணையம் பயன்படுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட அனைத்து அரசியலமைப்புரீதியான அமைப்புகளும் – ஆளுநர்கள், பல்கலைக்கழகங்கள், நீதித்துறை போன்றவை- ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களால் ஊடுருவப்பட்டுள்ளன. அவர்கள் தங்களது பிளவுபடுத்தும் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்ல தீவிரமாக முயல்கிறார்கள். அரசியலமைப்பும் பாராளுமன்றமும் கைவிடப்படாவிட்டாலும், அரசியலமைப்புச் சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகள் தாக்கப்படுகின்றன. மேலும், பாராளுமன்ற விதிமுறைகள் மீறப்படுகின்றன.

நவதாராளமயக் கொள்கைகளின் தாக்கம் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான அதிருப்தி பிப்ரவரி 12 அன்று நடந்த பொது வேலைநிறுத்தத்தில் மக்களின் பெரும் பங்கேற்பில் காணப்பட்டாலும், இவை அரசியல் களத்தில் பிரதிபலிக்கவில்லை. மத்தியிலும் பல மாநிலங்களிலும் பாஜக தலைமையிலான அரசாங்கம் பதினொரு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்ததன் காரணமாக, பாஜக-ஆர்.எஸ்.எஸ்.ஸின் கைகளில் அரசியல் அதிகாரம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் பிராந்திய முதலாளித்துவக் கட்சிகளும் நவதாராளமயக் கொள்கைகளை ஆதரிக்கின்றன. மேலும், கர்நாடகா, தெலுங்கானா, தமிழ்நாடு, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் அவர்கள் அதிகாரத்தில் இருக்கும்போது அவற்றை செயல்படுத்தி வருகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த அரசாங்கங்களும் பெருநிறுவன சார்பு கொண்ட நவதாராளமயக் கொள்கைகளை செயல்படுத்தும் பொருட்டு, தொழிலாளர்களின் உரிமைகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அவர்களின் அடிப்படை உரிமையான போராட்ட உரிமையை கட்டுப்படுத்துகின்றன.

ஒடுக்கப்பட்ட பிரிவினரிடையே ஊடுருவும் மனுவாதி சித்தாந்தம்

நூற்றாண்டுகால சமூக ஒடுக்குமுறையின் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்களான தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பெண்கள் போன்ற சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட பிரிவினரிடையே ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.கவின் செல்வாக்கும் வளர்ந்து வருகிறது. பிற்போக்குத்தனமான மனுவாதி சித்தாந்தத்தின் வலுவான ஆதரவாளர்களாக இருந்தபோதிலும், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க “முன்னேற்றுதல்” குறித்த தவறான வாக்குறுதிகளால் இந்தப் பிரிவினரை தவறாக வழிநடத்த முடிந்தது. இடதுசாரி சார்ந்த தொழிற்சங்கங்களால் நடத்தப்படும் வேலைநிறுத்தங்கள் உட்பட போராட்டங்களில் பங்கேற்கும் இந்த பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் தேர்தல்களில் பாஜகவுக்கு வாக்களித்து வருகின்றனர். இது தொழிலாளி வர்க்க அரசியலுக்கான இடத்தை மேலும் சுருக்கி வருகிறது.

தொழிலாளர் விரோத நவதாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் பயனுள்ளதாக இருக்க, தொழிலாளி வர்க்க அரசியலுக்கான இடம் புதுப்பிக்கப்பட வேண்டும்.

கற்பிக்க வேண்டிய மார்க்சியக் கோட்பாடு

லெனின் கூறியது போல, ஒவ்வொரு வேலைநிறுத்தமும் தொழிலாளி வர்க்கத்தின் உணர்வையும் நம்பிக்கையையும் உயர்த்தும் ஒரு அரசியல் வேலைநிறுத்தமாகும். ஊதியம் போன்ற பொருளாதாரக் கோரிக்கைகள் மீதான ஒரு வேலைநிறுத்தம் கூட முதலாளிகளுக்கும், அவர்களின் நலனைப் பாதுகாக்கும் அரசுக்கும் பெரும் சவாலாக விளங்குகிறது. ஆனால் அதே நேரத்தில், லெனின் ‘என்ன செய்ய வேண்டும்?’ என்ற நூலில் சுட்டிக்காட்டியது போல, ‘… தொழிலாளி வர்க்கம், அதன் சொந்த முயற்சியால், தொழிற்சங்க உணர்வை மட்டுமே வளர்க்க முடியும்’. சுரண்டல் அமைப்பை மாற்றுவதற்கான அரசியல் போராட்டத்தின் அவசியத்தைப் பற்றிய புரிதல் மற்றும் புரட்சிகர வர்க்க உணர்வு, வெளியிலிருந்து தொழிலாளி வர்க்கத்திற்கு அளிக்கப்பட வேண்டும். கட்சி மார்க்சியக் கோட்பாட்டை கற்பிப்பதன் மூலம் இதைச் செய்ய வேண்டும்.

ஆளும் வர்க்கங்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளித்துவக் கட்சிகளை தொழிலாளி வர்க்கம் நம்ப முடியாது. புரட்சிகர அரசியலைத் தவிர்க்கும் எந்தவொரு தொழிலாளி வர்க்க இயக்கமும் ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்கு சேவை செய்கிறது. அரசியலை முதலாளித்துவத்தின் கைகளுக்கு விட்டுவிடுவது, லெனின் கூறியது போல, தற்கொலைக்கு சமம்.

ஒரு தொழிலாளி வர்க்கக் கட்சியாக, சி.பி.ஐ(எம்) இன் அனைத்து மட்டங்களிலும் உள்ள குழுக்கள் முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த சுரண்டல் தன்மை பற்றியும், நவபாசிசப் போக்குகளை ஊக்குவிக்கும் தற்போதைய நவதாராளமய முதலாளித்துவ நெருக்கடி பற்றியும், சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவர மக்கள் ஜனநாயகப் புரட்சி மற்றும் சோசலிசத்தின் அவசியம் பற்றியும் தொழிலாளி வர்க்கத்திற்கு கற்பிக்க வேண்டும். விவசாயிகளுடன் ஒன்றிணைந்து சமூகத்தை மாற்றுவதற்கான போராட்டத்திற்கு தலைமை தாங்குவதில், தொழிலாளி வர்க்கத்தின் பங்கு பற்றியும் தொழிலாளி வர்க்கத்திற்கு கற்பிக்க வேண்டும்.

தமிழில் : அபிநவ் சூர்யா

Tags: