அமெரிக்காவின் மனிதநேயமற்ற தடைகள்

சர்வதேசச் சட்டங்களையும் மனிதநேய விதிகளையும் முற்றிலுமாகப் புறந்தள்ளிவிட்டு, கியூபா நாட்டின் மீதுஅமெரிக்க அரசு தொடர்ந்துவரும் கடுமையான பொருளாதாரத் தடைகள் அப்பகுதி மக்களிடையே பெரும் மனிதநேய நெருக்கடியைஏற்படுத்தியுள்ளன. பனிப்போர் காலத்து வன்மத்தின் தொடர்ச்சியாக அமெரிக்கா விதித்துவரும் இந்த ஒருபக்கத்தடைகள், ஒரு நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார அமைப்பையே சீர்குலைத்துள்ளன.
சமீபத்தில் அமெரிக்க நிர்வாகம் கியூபாவின் கட்டுமானம், கனிமம் மற்றும் உலோகத் துறைகளைச் சேர்ந்த 9 அரசு நிறுவனங்கள் மீது புதிய தண்டனைகளை விதித்துள்ளது. மேலும், கியூபாவிற்குப் பயணம் செய்யும் அமெரிக்கக் குடிமக்கள் அந்நாட்டு அரசு நிறுவனங்களுடன் வணிகத் தொடர்புகள் கொள்வதற்கான விதிமுறைகளைக் கடுமையாக்கியுள்ளது.
அமெரிக்காவின் இந்தத் தொடர் பொருளாதார முடக்கம் மற்றும் எரிபொருள் தடையின் நேரடித் தாக்கத்தால் கியூபா பல்வேறு துறைகளில் ‘நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. எரிபொருள் தட்டுப்பாட்டால் மின்சாரக் கட்டமைப்பு முழுமையாக முடங்கி, நாடு முழுவதும் நீண்ட நேர மின்தடை ஏற்பட்டுள்ளது. உதிரிபாகங்கள் மற்றும்வாகன இறக்குமதி தடையால் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
போர் நடைபெறும் நாடுகளில் கூட மருத்துவமனைகள் மருந்து சேவைகள் தடையின்றி தொடரஎந்த தரப்பும் இடையூறு செய்யக்கூடாது என்பதுசர்வதேச சட்டமாகும். அதை முற்றிலும் புறக்கணித்து, அவசர மருத்துவப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும்மருந்துகள் கியூபா செல்ல அமெரிக்கா தடைவிதித்துள்ளதால் நோயாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது.

கியூபாவின் முக்கிய வருவாயான சர்வதேச சுற்றுலாத்துறை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கியூபாவின் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரம் ஆகும். இங்குள்ள பழையஹவானா பகுதி யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாகும்.பழமையான காலனித்துவ கட்டிடங்கள் மற்றும் கடற்கரைச் சாலையான மலேகோன் ஆகியவை மிகவும் பிரபலமானது.உலகின்மிக அழகிய கடற்கரைகளில் ஒன்றான பிளே வரடெரோ இங்குள்ளது. இவற்றை காண உலகின்பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலாப்பயணிகள் வந்தால் அவர்களை அழைத்துவரும் சுற்றுலா நிறுவனங்கள்விமான நிறுவனங்களை அமெரிக்கா மிரட்டுவதோடு அதன் மீதும் தடைவிதிக்கிறது.
அமெரிக்காவின் இந்தச் செயல்களைக் கியூப வெளியுறவுத்துறை அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ் வன்மையாகக் கண்டித்துள்ளார். கியூப மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதைத் தடுப்பதே அமெரிக்காவின் நோக்கம் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஒரு நாட்டின் இறையாண்மையைப் பறித்து, அப்பாவி மக்களைப் பொருளாதார ரீதியாக வதைக்கும் இத்தகைய மனித நேயமற்ற தடைகளை அமெரிக்கா உடனடியாகத் விலக்கிக்கொள்ள வேண்டும். சர்வதேசச் சமூகமும், மனிதாபிமான அமைப்புகளும் உடனடியாகத் தலையிட்டு கியூப மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதோடு, இந்தத் தடைகளுக்கு எதிராகக் குரலெழுப்பவேண்டும்.
– தீக்கதிர்
2026.08.21