ராட்க்ளிஃப் மொஸ்கோ பயணம்: புயலுக்கு முன்பான ஒரு பயணம்
-பேராசிரியர் கிளென் டீசன்

சி.ஐ.ஏ இயக்குனர் ஜோன் ராட்க்ளிஃப் மொஸ்கோவுக்கு மேற்கொண்ட குறுகிய பயணம் தொடர்பான இரகசியம் காரணமாக, தவிர்க்க முடியாதபடி பல ஊகங்களை எழுப்பும். மேலும் ஊடகச் செய்திகள் போர் சித்தரிப்புகளுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும். இது ஒரு வழக்கமான பயணம் என்றும் அசாதாரணமானது எதுவுமில்லை என்றும் எங்களுக்குச் சொல்லப்படுகின்றது. இருப்பினும், உண்மையில் இது நவம்பர் 2021 இற்குப் பிறகு ஒரு சி.ஐ.ஏ இயக்குனரின் முதல் பயணம் ஆகும். நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான மோசமடைந்து வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்தப் பயணத்தின் சாத்தியமான நோக்கம் குறித்து நாங்கள் சில முடிவுகளுக்கு வரலாம்.
வோஷிங்டனில் விரக்தி வளர்ந்து வருவதால், இந்தப் பயணம் மொஸ்கோவுக்கு ஒரு செய்தியையும் அச்சுறுத்தலையும் வழங்கும் நோக்கமாகக் கொண்டிருந்தது. நேட்டோவும் ரஷ்யாவும் இப்போது தங்கள் மோதல் வரலாற்றில் மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் உள்ளன. 2014 இல் நடந்த சதிக்குப் பிறகு, உக்ரைன் பினாமி போரை ரஷ்யாவிற்கு எதிராக சி.ஐ.ஏ பொறுப்பேற்றுள்ளது, மேலும் அனைத்தும் தோல்வியடைகையில், பாரியளவில் போர் தீவிரமடையுமென எதிர்பார்க்கப்படலாம்.
உக்ரைன் பினாமி போர் சீர்குலைந்து வருகிறது
உக்ரைனிய இராணுவம் சோர்வடைந்து, முன்முனைகளில் சரிந்து வருகிறது. கடற்படை முற்றுகை மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பின் அழிவு காரணமாக பொருளாதாரம் சிதைந்து வருகிறது. இராணுவப் படையினரின் தீவிரமான ‘ஆட்சேர்ப்பு’ மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளால் சமூக அமைதியின்மை அதிகரித்து வருகின்றது. அரசியல் நெருக்கடி அரசாங்கத்தை கவிழ்க்கக்கூடும். பினாமி போரைத் தொடர நேட்டோவிடம் பணமும் ஆயுதங்களும் தீர்ந்து வருகின்றன. மேலும் ஐரோப்பா முழுவதும் அரசியல் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. அதனை எப்போதும் அடக்கி ஒடுக்க முடியாது.
அமெரிக்கா, ஈரானில் சிக்கி பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றது. அதே நேரத்தில் ரஷ்யா ஈரானுக்கு உதவி செய்து வருகிறது. மேலும் மாற்று சர்வதேச பொருளாதார கட்டமைப்பை நிறுவுவதில் சீனாவின் முன்னணி பங்காளியாகவும் ரஷ்யா மாறியுள்ளது.
ரஷ்யா மற்றும் ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போர்கள், அத்துடன் சீனாவிற்கு எதிரான பொருளாதாரப் போர் ஆகியவை யூரேசிய கண்டத்தில் உள்ள முக்கிய எதிரிகளை வீழ்த்த அல்லது பின்வாங்கச் செய்து, அமெரிக்காவின் உலகளாவிய ஆதிக்கத்தை மீட்டெடுக்கும் நோக்கத்தில் இருந்தன. மாறாக, இந்த போர்கள் பலதுருவ உலக ஒழுங்கை நோக்கிய மாற்றத்தை தீவிரப்படுத்தியுள்ளன. ஏனெனில் அமெரிக்கா அனைத்து முனைகளிலும் தோல்வியை எதிர்கொண்டு, இராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தன்னை பலவீனப்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் அமெரிக்க அரசியல் அமைப்பின் நிலைமை மோசத்திலிருந்து மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. கிஸ்ஸிங்கரின் மிக மோசமான கனவு என்று வர்ணிக்கத்தக்க வகையில் அமெரிக்கா தனது முக்கிய யூரேசிய எதிரிகளை ஒன்றிணைத்துள்ளது. மேலும் அரசியல் மேற்குலகமானது ஏகாதிபத்தியத்தின் அதிகப்படியான விரிவாக்கம் மற்றும் பிந்தைய மேலாதிக்கப் பொருளாதார மாதிரி இல்லாததால் துண்டு துண்டாக உடைந்து வருகிறது.
அமெரிக்கா ஈரானை தோற்கடித்துவிட்டது என்றும் ஹோர்முஸ் நீரிணை திறந்த நிலையில் அமெரிக்கக் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் ட்ரம்ப் தொடர்ந்து சொல்லி வருகிறார். அதே நேரத்தில் நேட்டோ ‘உக்ரைன் வெற்றி பெற்று வருகின்றது’ என்று தொடர்ந்து வலியுறுத்துகிறது.
உக்ரைனில் நேட்டோவின் பினாமி போர் தள்ளாடத் தொடங்கும்போது, பிரித்தானியாவின் பொறுப்பற்ற செயல்களில் காணப்படுவது போல நேட்டோவின் போர் தீவிரமடைய வாய்ப்புள்ளது. ரஷ்யா தனது பங்கிற்கு, உக்ரைனுக்கு எதிராக ஒரு தீர்க்கமான தாக்குதலுக்கு வழிவகுக்கும் வகையில் தீவிரமடைய வாய்ப்புள்ளது. அத்தோடு அதன் தடுப்பணியை மீட்டெடுக்க நேட்டோவுடன் ஒரு கடுமையான நிலைப்பாட்டை எடுக்கும். ஏனெனில் நேட்டோ, பினாமி போருக்கும் நேரடிப் போருக்கும் இடையிலான எல்லைகளை நீண்ட காலத்திற்கு முன்பே கடந்துவிட்டது. நேட்டோவை தடுப்பது படையெடுப்பைக் குறிக்காது. ஆனால் மறைமுக நடவடிக்கைகளின் வடிவத்தில் அல்லது நேரடித் தாக்குதல்கள் கூட ரஷ்யாவின் சிவப்பு கோடுகளை அமுல்படுத்துவதற்கான விருப்பங்கள் ஆகும். இருப்பினும், இந்த நேரத்தில், நேட்டோவுடன் தேவையற்ற மோதல் அதிகரிப்பு இல்லாமல் பினாமி போரை முடிவுக்குக் கொண்டுவருவதே ரஷ்யாவின் முன்னுரிமையாகும்.

இராஜதந்திரத்தை உயிர்ப்பிப்பதா?
அப்படியென்றால் ராட்க்ளிஃப் மொஸ்கோவில் என்ன செய்தார்? அமெரிக்கா தனது நிலைமையை மேம்படுத்த இராஜதந்திரத்தை எவ்வாறு பயன்படுத்த முடியும்? உக்ரைனின் நடுநிலைமையை மீட்டெடுத்து, பிராந்திய தகராறை தீர்க்கும் எந்தவொரு சமாதான ஒப்பந்தத்திற்கும் ஒப்புக் கொண்டு நேட்டோ தனது பெரிய உக்ரைனிய பினாமி இராணுவத்தைக் கைவிட தயாராக உள்ளது என்பது மிகவும் சாத்தியமற்றது. ஈரானுடனான போரைப் போலவே, இராஜதந்திர முயற்சிகள் என்பது மீண்டும் படையை அணிதிரட்டுவதற்கும் போர்க்களத்தை மிகவும் சாதகமாக வடிவமைப்பதற்கும் ஓர் இடைவெளியைப் பெறுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன.
ரஷ்யாவின் ஆழமான உட்பகுதிகளில் உள்ள குடிசார் உள்கட்டமைப்பைத் தாக்க உக்ரைன் மற்றும் நேட்டோ நடத்திய 40 நாட்கள் பிரச்சாரம் ரஷ்யாவை முறியடிக்கவில்லை. மாறாக, அது பெரும் பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளது.
தானிய ஏற்றுமதி ஒப்பந்த விதிகளுக்குத் திரும்புவதன் மூலமாக, கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவரவும், எரிசக்தி உள்கட்டமைப்புக்கு எதிரான போர்நிறுத்தத்தையும், ஸ்லோவியான்ஸ்க், க்ராமடோர்க் மற்றும் ஜபோரிஷியா நகரங்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்தவும், ராட்க்ளிஃப் விரும்பியிருக்கலாம். செர்னிகோவ் பிராந்தியத்தில் ரஷ்யா மற்றொரு முனையைத் திறக்கத் தயாராகி வருவது குறித்து வோஷிங்டனிற்கு கவலைகள் இருக்கலாம். இத்தகைய முயற்சிகள், ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்த நிபந்தனையற்ற போர்நிறுத்தம் போலவே, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பதிலாக அதனை நீட்டிக்கும் நோக்கம் கொண்டவை.
எனவே, ரஷ்யா எந்த விட்டுக்கொடுப்புகளையும் செய்வதற்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது, ஏனெனில் ரஷ்யாவால் குறிப்பிடத்தக்க எந்த விட்டுக்கொடுப்புகளையும் வழங்க முடியாது. இது பிராந்திய விரிவாக்கம் குறித்த போராக இருந்திருந்தால், நேட்டோவின் அதிகரிப்பும் அழுத்தமும் சில ரஷ்ய விட்டுக்கொடுப்புகளை ஏற்படுத்தியிருக்கலாம். இருப்பினும், நேட்டோவில் உள்ள அரசியல்-ஊடக ஸ்தாபனம் ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஒரு சங்கடமான உண்மை என்னவென்றால், உக்ரைனில் நேட்டோவின் அத்துமீறலை ரஷ்யா ஓர் இருப்புக்கான அச்சுறுத்தலாகக் கருதுகின்றது. இந்த மதிப்பீட்டை நேட்டோ ஒப்புக்கொள்கிறதோ இல்லையோ என்பது முற்றிலும் பொருத்தமற்றது, ஏனெனில் ரஷ்யா தனது நம்பிக்கையின்படியே செயல்படும். இது ரஷ்யாவுக்கு விட்டுக்கொடுப்பதற்கு மிகக் குறைவான இடத்தையே உள்ளது என்பதைக் குறிக்கிறது.
2014 ஆம் ஆண்டு முதல் எந்த நேரத்திலும், நேட்டோ விரிவாக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலமும், உக்ரைனின் நடுநிலைமையை மீட்டெடுப்பதன் மூலமும் இந்த மோதலைத் தீர்த்திருக்க முடியும். இந்த நோக்கத்தை உறுதிசெய்யும் எந்த அரசியல் தீர்வும் இல்லாத நிலையில், நேட்டோ ரஷ்யாவுக்கு எதிராக முன்னணிப் பகுதியாகப் பயன்படுத்தக்கூடிய உயர் மதிப்புமிக்க உக்ரைன் நிலப்பரப்பை ரஷ்யா பறித்துக்கொள்ளும். மேலும் உக்ரைனின் மற்ற பகுதிகள் செயலற்ற, நிலத்தால் சூழப்பட்ட ஒரு சிறிய நாடாகக் குறைக்கப்படும். இந்த தீர்வு உக்ரைனுக்கு மிகக் கடினமான எதிர்காலத்தையும், நேட்டோ மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் பல தசாப்த கால ஸ்திரமின்மையையும் உருவாக்கும். ஆனாலும் மொஸ்கோவின் பார்வையில் இதுவே சாத்தியமான ஒரேயொரு வழி. ஏனெனில் நேட்டோ விரிவாக்கத்தை நிறுத்தாது என்பதோடு உக்ரைனின் நடுநிலைமையையும் மீட்டெடுக்காது.
நாங்கள் எதிர்கொள்ளவிருக்கும் மிகவும் ஆபத்தான காலத்தை வழிநடத்த, இராஜதந்திர வழித்தடங்களையும் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்தும் நோக்குடன் ராட்க்ளிஃபின் வருகை அமைந்திருக்க வேண்டும் என்று என்னிலுள்ள ஒரு நம்பிக்கைவாதி நினைக்கிறான். இருப்பினும், சூழ்நிலையை மீட்டெடுக்கும் நம்பிக்கையில் இராஜதந்திரம் இன்னும் அதிக இறுதி எச்சரிக்கைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் வடிவத்தை எடுக்கும் என்று அதிக வாய்ப்புள்ளது. கணிக்கக்கூடிய வகையில், கோபம் கொந்தளிக்கும் மொஸ்கோவில் இது நன்றாக எடுபடாது.
[கிளென் டீசென் (Glenn Diesen) தென்கிழக்கு நோர்வே பல்கலைக்கழகத்தில் (University of South-Eastern Norway -USN) பேராசிரியராகவும், உலக விவகாரங்களில் ரஷ்யா என்ற இதழின் இணை ஆசிரியராகவும் உள்ளார். டீசெனின் ஆராய்ச்சி பூகோளப் பொருளாதாரம், பழமைவாதம், ரஷ்ய வெளியுறவுக் கொள்கை மற்றும் பெரும் யூரேசியா தொடர்பில் கவனம் செலுத்துகின்றது.]