வீழ்வேன் என்று நினைத்தாயோ.. அறிவியல் புரட்சியால் தலைநிமிரும் கியூபா!

– ஆயிஷா இரா.நடராசன்

ப்படி ஒரு அரசியல் நெருக்கடி வேறு எந்த நாட்டிற்கும் இதுவரையில் தரப்பட்டது இல்லை. கியூபா தற்போது கிட்டத்தட்ட 70 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான மனிதாபிமான மற்றும் பொருளாதாரத் தடையை சந்தித்து வருகிறது. தொடர் தாக்குதல்களால் முழுமையான மின் கட்டமைப்பு செயலிழப்பு கடுமையான எரிபொருள் பற்றாக்குறை அதீத பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய சேவைகளின் சீர்குலைவு இவற்றைத் திட்டமிட்டு அந்த நாட்டின் மீது திணித்து வருகிறது அமெரிக்கா..

குறிப்பாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமுல்படுத்தப்பட்ட அமெரிக்காவின் கடுமையான எண்ணெய் முற்றுகை மற்றும் தீவிரப்படுத்தப்பட்ட இணைய தடைகள் அத்துடன் வெனிசுவேலாவில் இருந்து மானிய விலையில் வழங்கப்பட்ட எண்ணெய் விநியோகம் தடைப்பட்டது உட்பட பல்வேறு நெருக்கடிகள்.. கொசு கடித்து ஐயோ என்று அலறிய போதெல்லாம் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு உடனடியாக உதவி செய்ய ஓடோடி வந்த கியூபா அனைத்து நாடுகளாலும் அவற்றின் வலதுசாரி அரசாங்கங்களாலும் இப்போது கைவிடப்பட்டுள்ளது..

மனிதாபிமான சீர்குலைவின் விளிம்பில் கியூபா இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. ஆனால் மற்ற நாடுகளைப் போல.. எங்களை காப்பாற்றுங்கள் என்கிற அலறல் இதுவரையில் கேட்கவே இல்லை கியூபா போராடுகிறது பின்வாங்கவில்லை சரணடையவில்லை.. ஒரு அறிவியல் தேசமாக அது தலைநிமிர்ந்து நிற்கிறது. விழுவேன் என்று நினைத்தாயோ என்று சவால் விடுகிறது.

இயற்கை வளங்கள் குறைவாக இருக்கலாம் பொருளாதாரத் தடைகள் ஒரு நாட்டை சூழ்ந்திருக்கலாம் ஆனால் அறிவியலிலும் கல்வியிலும் மனித வளப்பிலும் முதலீடு செய்த ஒரு தேசம் அதனை முற்றிலும் தோற்கடிப்பது சாத்தியமில்லை என்பதை வரலாற்றில் இன்று எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கிறது கியூபா. ஏன் இன்று நாம் கியூபாவை பற்றி எழுத வேண்டும்

இன்று கியூபா பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. அது ஒரு அறிவியல் தேசம் சோசலிச நாடு.. இன்று உலகத்தில் மிஞ்சி இருக்கும் சிவப்பு தேசங்களில் தனக்கென்று ஒரு தனித்துவம் பெற்ற பகுதி.. எப்படியாவது அங்கு சோசலிசத்தை முடிவுக்கு கொண்டு வந்து முதலாளியத்தை திணித்து சர்வதேச சந்தைக்குள் அதை இழுத்து விட வேண்டும் என்று அமெரிக்கா துடிக்கிறது.. பல தசாப்தங்களாக நீடித்து வரும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள், எரிபொருள் பற்றாக்குறை, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாடு.. கடுமையான பணவீக்கம், பொருளாதார நெருக்கடி உலகத் தரத்திற்கான ஆய்வுக் கருவிகளை வாங்குவதில் சிரமம் ஆனால் இந்த கடினமான சூழ்நிலையிலும் கியூபா தனது கல்வி அறிவியல் மருத்துவம் ஆகிய துறைகளில் நிமிர்ந்து நிற்கிறது.

இது எப்படி சாத்தியம். கியூபாவால் எப்படி தாக்குப்பிடிக்க முடிகிறது என்று வியந்தபொழுது எனக்கு கிடைத்த புத்தம்.. அறிவார்த்த பொருளாதாரம் மற்றும் சோசலிசம், கியூபாவின் அறிவியல் மற்றும் சமூகம் (THE KNOWLEDGE  ECONOMY AND SOCIALISM..SCIENCE AND SOCIETY IN CUBA) என்கிற தலைப்பில் அறிஞர் அகஸ்டிங் லேஜ் டாவிலா எழுதிய புத்தகம் கைக்கு வந்தது.. மேலும் மேலும் வாசித்து நான் வியந்து கொண்டே இருக்கிறேன்.

கியூபாவின் எதிர்காலம் அவசியமாக விஞ்ஞானிகளின் அறிவியலின் எதிர்காலமாக இருக்கிறது. தற்காலமும் அப்படியே உலக அறிவியலின் தலைமை கண்டிப்பாக அமெரிக்கா அல்ல.. மக்கள் அறிவியலின் தலைமையை தன் கையில் வைத்திருக்கும் கியூபாதான் மனித குலத்தின் உயிர்வாழ்விற்கே அவசியமான கேள்விகளுக்கு இந்த புத்தகம் மிகத் தெளிவான பதில்களை வழங்குகிறது அறிவியலுக்கு கலாச்சாரம் என்பது ஏன் இன்றியமையாதது.. என்கிற உண்மையின் பின்னணியில் தான் இன்றைய கியூபாவின் அசைக்க முடியாத தற்காப்பு வியந்து போற்றத் தக்க வகையில் நிமிர்ந்து நிற்கிறது.

முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய அறிவியல் விஷயம் ஒன்று உண்டு.. கியூபாவில் இயற்கை வளங்களை விட மனித வளத்தில் அவர்கள் அதிகம் முதலீடு செய்திருக்கிறார்கள். எண்ணெய் வளமில்லை தங்கச் சுரங்கங்கள் இல்லை தொழில்துறையின் கார்ப்பரேட்கள் இல்லை ஆனால் கியூபா ஒரு முடிவு எடுத்தது எங்கள் நாடு மிகப்பெரிய வளம் கொண்டது.. அதுதான் மனித மூளை!

அதனால் அந்த சோசலிச நாடு முன்னுரிமை கொடுத்தது.. அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் பொது சுகாதாரம் அனைவருக்கும் அறிவியல் விழிப்புணர்வு அனைவருக்குமான பல்கலைக்கழக ஆராய்ச்சி உயிரி தொழில்நுட்பம் மருத்துவ ஆராய்ச்சி.. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஒரு நாட்டின் உண்மையான செல்வம் அதன் மக்களின் அறிவுதான் என்பதை கியூபா உலகிற்கு நிரூபித்தது அதன் காரணமாக வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று இன்றைக்கு தலைநிமிர்ந்து நிற்கிறது.

கியூபாவின் அறிவியல் பல சாதனைகளை உருவாக்கியுள்ளது. என்னால் கியூபாவின் 10 அற்புத அறிவியல் அறிஞர்களை உங்களுக்கு அறிமுகம் செய்ய முடியும் தடைகளை கடந்த கியூபாவின் கதையோடு பின்னிப் பிணைந்தவர்கள் இவர்கள்.. அவர்களை சந்திக்கும் முன் கியூபாவின் அறிவியல் தத்துவம் என்ன என்பதை நாம் பார்க்க வேண்டும் நமக்கெல்லாம் நன்கு தெரிந்ததுதான்.

27 நாடுகளில் கியூபா தொற்று நோய்களை கட்டுப்படுத்தியது உலகத்தின் தரமான தடுப்பூசிகளை உருவாக்கி 52 நாடுகளுக்கு அது வழங்கியது, குறைந்த செலவில் மருந்துகளை உருவாக்கி மூன்றாம் உலக நாடுகளை காப்பாற்றியது, புற்றுநோய் சிகிச்சையின் புதிய வழிமுறைகளை அது உருவாக்கியது, கொரோனா பெருந்தொற்று காலத்தில் கியூபா தனது சொந்த தடுப்பூசிகளால் பல நாடுகளை காப்பாற்றிய சாதனை வரலாற்றில் பதிவு என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

கியூபாவின் அறிவியல் என்பது வெறும் ஆய்வக பணி அல்ல. விண்வெளிக்கு இந்த வகை ராக்கெட்டை அனுப்பிய இரண்டாவது நாடு புதிய வகை இராணுவ கப்பலை கொண்டிருக்கும் முதலாவது நாடு என்றெல்லாம் மார்தட்டிக் கொள்ளும் எத்தகைய போலி அறிவியலும் அங்கு இல்லை. கியூபாவின் அறிவியல் சமூக சேவை அம்சங்கள் கொண்டது அதுதான் சோஷலிஸ அறிவியல் ஆகும்.. மனிதர்களிடையே பாகுபாட்டை கடந்து மூட நம்பிக்கைகளை முடிவுக்கு கொண்டு வந்த நாடு.. மக்களுக்கான அறிவியல் என்பது அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் அறிவியலாக அங்கு உருவானது

இலாபத்தை விட சமூக தேவையே முதன்மையானது என்று கருதுகின்ற அறிவியல் கியூபாவின் அறிவியல் உயிரி தொழில்நுட்பத் துறை ஒரு மூடிய சுழற்சி மாதிரியை பயன்படுத்துகிறது இந்த உதாரணத்தை நாம் சொல்லத் தான் ஆக வேண்டும் ஆராய்ச்சி மேம்பாடு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் உற்பத்தி ஆகிய அனைத்தும் செங்குட்டாக ஒருங்கிணைக்கப்பட்டு அரசால் நிதியளிக்கப்படுகின்றன அதிகபட்ச இலாப வரம்புகளைக் கொண்ட மருந்துகளுக்கு கண்டிப்பாக முன்னுரிமை அளிப்பதற்கு பதிலாக வளரும் நாடுகளை பாதிக்கும் நோய்கள் அல்லது பொது சுகாதார முன்னுரிமைகள் கவனம் செலுத்தப்படுகின்றன.

இன்னொரு முக்கியமான விஷயம். இந்தியா மாதிரியான ஒரு தேசத்தை எடுத்துக் கொண்டால் இயற்பியலில் என்ன ஆய்வு நடக்கிறது என்பது வேதியியலாளர்களுக்குத் தெரியாது.. கணினி துறையில் நடக்கும் ஆய்வுகள் பற்றி கணிதத்துறைக்கு தெரியாது.. ஆனால் மாபெரும் கூட்டுறவு வலை அமைப்புகள் கொண்டது கியூபா கியூபாவின் அறிவியல் சூழல் அமைப்பு விஞ்ஞானிகள் துறை வல்லுநர்கள் ஒரு குறிப்பிட்ட துறையில் நடக்கும் முன்னேற்றத்தை அல்லது கண்டுபிடிப்பை பிற துறைகளுக்கு பொருத்திப் பார்க்கின்ற புதுமையான அமைப்பை கொண்டிருக்கிறார்கள்.. துண்டு துண்டாக இருக்கும் அறிவியல் ஆராய்ச்சி அமைப்புகளை தகவல் தேக்கத்திற்கு உட்படுத்தாமல் இந்த முறை ஒன்றிணைக்கிறது

மருத்துவ அறிவியல் எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறதென்றால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குடும்ப மருத்துவர் மற்றும் செவிலியரை அரசே அமைத்துக் கொடுக்கிறது.. பெரும்பாலான வளர்ந்த நாடுகள் தீவிர சிகிச்சையை தற்போது காப்பீட்டுத் துறையாக மாற்றிக்கொண்டிருக்கும் நிலையில் கியூபா அனைவருக்குமான மருத்துவத்தை அரசே எதிர்கொள்ளும் செலவினமாக மாற்றுகிறது.. லாபத்திற்காக மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு பதிலாக கியூபா தனது வெளியுறவுக்கொள்கையின் ஒரு முக்கிய அங்கமாக பல்லாயிரக்கணக்கான மருத்துவர்களையும் விஞ்ஞானிகளையும் வளர்ந்து வரும் நாடுகளுக்கும் பேரிடர் பகுதிகளுக்கும் தொடர்ந்து அனுப்பி அத்துறையில் பெரும் புரட்சியை மேற்கொண்டுள்ளது.

அறிவியல் மனிதகுலத்திற்கே பயன்பட வேண்டும் என்கிற அடிப்படையை கொண்டது மருத்துவமும் ஆராய்ச்சியும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட வேண்டும் அதே நேரத்தில் உலகின் பல நாடுகளில் அரசுத்துறையும் தனியார் துறையும் இணைந்து பல முக்கிய அறிவியல் சாதனைகளை நிகழ்த்தியதாக அறிவித்துக் கொண்டிருக்கும் பொழுது கியூபாவின் சிறப்பு பொது சுகாதாரத்தை ஆராய்ச்சியின் மையமாக வைத்திருப்பதில்தான் இருக்கிறது..

உயிரி தொழில்நுட்பம் உலகத்தில் முதலிடம். வேளாண் அறிவியல் காலநிலை ஆய்வு.. புயல் சுறாவளி கணிப்பு.. சுற்றுச்சூழல் பாதுகாப்பு கடல் உயிரியல் நரம்பியல் துறை மரபணு அறிவியல் இவை அனைத்திலும் உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் பாடப்புத்தகங்களை கியூபா தான் உருவாக்கிக் கொடுத்தது.. இவற்றுக்கான அடிப்படை கருவிகள் பலவற்றை கண்டுபிடித்தது மட்டுமல்ல அவற்றிற்கு எந்த உரிமமும் கோராமல் மிக குறைந்த விலையில் உலகெங்கும் அது கிடைப்பதற்கான வழியை வகுத்துக் கொடுத்தது சோசலிச கியூபா.

சவால்களுக்கு மத்தியில் ஆய்வுகள் தொடரும் அற்புத தேசம். எதையெல்லாம் கியூபா சாதித்துக் கொண்டிருக்கிறதோ.. அதற்கெல்லாம் தன்னுடைய உலகளாவிய ஏகாதிபத்தியத்தைப் பயன்படுத்தி கடும் தடைகளை கொடூரமாக விதித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு எதிராக தன்னிடம் ஏற்கனவே இருக்கும் கருவிகளைக் கொண்டு புதிய மாற்றுக் கருவிகளைக் கண்டுபிடித்து சீரமைத்து பயன்படுத்தும் மிக சாதாரண மக்கள் அறிவியல் அங்கே உள்ளது. தேவையான தொழில்நுட்பங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ளும் சாதாரண மனிதர்கள் தான் அற்புத விஞ்ஞானிகளாக அங்கு திகழ்கிறார்கள்.. அறிவியல் மீதான அர்ப்பணிப்பு அவர்களை முன்னேற்றுகிறது.

இன்றைக்கும் அதன் வெற்றிக்கு பின்னால் 10 அற்புதமா மனிதர்களை நாம் பட்டியலிட முடியும்.. கார்லோஸ் ஜூவான் பின்லே.. இந்த மாமனிதர் அந்த கடல் பிராந்தியத்தில் தற்போதுள்ள நெருக்கடியில் பரவும் மஞ்சள் காய்ச்சல் என்பது கொசுக்களால் தான் பரவுகிறது என்பதை அறிவியல் ஆதாரத்துடன் வெளியீட்டு வெப்பமண்டல மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் அளவிற்கு உயர்ந்தவர்.. இவர் கட்டமைத்துக் கொடுத்த சமூக மருத்துவ இயலில் ஒளிர்கிறது இன்றைய கியூபா.

ஜோஸ் ரூபியேரா.. மிகவும் புகழ்பெற்ற கியூபாவின் வானிலை ஆய்வாளர் கடுமையான நெருக்கடிக்கு இடையே அன்றாட சுறாவளிகளை துல்லியமாகக் கணித்து ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருப்பவர் பேரிடரைத் தடுக்க முடியாது ஆனால் உயிரிழப்பை அறிவியல் மூலம் முற்றிலும் தடுக்கலாம் என்பதை தற்போதும் நிரூபித்துக் கொண்டிருக்கும் மாமனிதர்.. இவர் என்னென்ன உத்திகளைப் பயன்படுத்துகிறார் என்பதைப் பார்ப்பதற்காகவே தனியாக உளவுத்துறை வைத்திருக்கிறது அமெரிக்கா.

பிடல் காஸ்ட்ரோ டயாஸ் பலராட்.. அணு இயற்பியல் மற்றும் உயர்தர அறிவியல் ஆராய்ச்சியை கியூபாவில் வளர்த்தெடுக்க முக்கிய பங்கு வைத்தவர். இன்று நாட்டின் மேம்பட்ட அறிவியல் நிறுவனங்களை உருவாக்கிக் கொடுத்தவர் அறிவியல் கொள்கைகளை வலுப்படுத்துவதற்கு பணியாற்றியவர் எது எப்படி ஆனாலும் தடையற்ற மின்சாரத்தை நாடு வழங்குவதற்கு அடிக்கோடு இட்டவர்.

பெட்ரோஸ் வால்டஸ் சோசா.. மூளை மின்னலைகள் EEG செயற்கை நுண்ணறிவு மற்றும் நரம்பியல் ஆகிய துறைகளில் உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி.. மூளை செயல்பாடுகளை புரிந்து கொள்ள புதிய கணினி மாதிரிகளை உருவாக்கிக் கொடுத்த ஆரம்ப விஞ்ஞானியான இவர் தற்போது நாடு எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு நடுவில்.. துல்லியமான கணக்கீடுகளின் மூலம் எங்கெங்கே உதவிகள் தேவையோ அங்கு அனுப்புவதற்கான செயற்கை நுண்ணறிவு அம்சங்களை மக்கள் அறிவியலாக வழங்கிக் கொண்டிருப்பவர்.

அன்டோனியோ நன்ஸ் ஜெமினஸ்.. புவியியல் குகை ஆய்வு சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் குறிப்பிடத் தக்க பங்களிப்பு செய்தவர்.. கியூபாவின் புதிய இயற்கை வளங்களை அவர்கள் செயற்கைக்கோள் மூலம் அறிந்து கொள்வதில்லை மாறாக இவர் தலைமையில் இருக்கின்ற புவியியல் ஆய்வுக்குழு கியூபாவின் இயற்கை வளங்களை அறிவியல் ரீதியாக ஆவணப்படுத்தி.. சரியான அளவிற்கு பயன்படுத்தி இயற்கையையும் மனித குலத்தையும் இன்றைய நெருக்கடியில் காப்பாற்றும் புதிய உத்திகளை முன்மொழிகிறது.

பெட்ரோ கௌரி.. வெப்பமண்டல மருத்துவத்தின் உலகளாவிய முன்னோடி மலேரியா ஒற்றுணி நோய்கள் வெப்பமண்டல தொற்று நோய்கள் ஆகியவற்றுக்கான சர்வதேச மருந்துகள் எதையும் ஐநா நிறுத்திவிட்டது.. இவரது பெயரிலேயே நிறுவப்பட்ட ஒரு ஆய்வு நிறுவனம் கியூபாவில் உள்ளது ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு பணி செய்கிறார்கள் முன்னணி தொற்று நோய் ஆராய்ச்சி மையங்களில் ஒன்றாக இது வளர்க்க பட்டுள்ளது அனைத்து வகை மருந்துகளையும் இங்கே அவர்கள் உற்பத்தி செய்கிறார்கள்.. மருத்துவ உபகரணங்கள் மருந்துகள் தயாரிப்பதில் சுயசார்பு அடைந்தது கியூபா.

மரியா குஷ்மன் டிராடோ.. மிக அதிக பாதிப்பு ஏற்படுத்தியது டெங்கு காய்ச்சலாகும் டெங்கு வைரஸ் குறித்த ஆய்வுகளில் ஏற்கனவே உலக அளவில் மதிக்கப்பட்ட சரிங்க வெப்பமண்டல நாடுகளில் டெங்கு அது மற்றும் கண்காணிப்பு முறைகளை ஐநா இவரைக் கொண்டுதான் உருவாக்கியது தற்போது அவர் நாட்டினுடைய அடிப்படை சுகாதாரத்தில் பொறுப்பேற்றுக்கொண்டு தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்..

அகஸ்டின் லேக் டாவிலா .. புற்றுநோய்க்கு எதிராகப் போராடிய அறிவியலாளர் என்று இவரைப் பற்றி தனியாக ஒரு  புத்தகம் எழுதப்பட்டுள்ளது இன்றைக்கு கியூபாவின் மகத்தான அறிவியலாளர்களில் ஒருவர். அறிவியல் மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் நாட்டின் நெருக்கடியை போக்க வேண்டும் என்கிற இரண்டு முழக்கங்களை முன் வைக்கிறார். புற்றுநோய்க்கான தீர்வு சிகிச்சையை உலகளவில் அறிமுகப்படுத்திய இந்த மாமனிதர் உலகின் மிகப்பெரிய புற்றுநோய் என்று முதலாளியத்தை சாடுகிறார்.

சென்ட் வெரைஸ் பென்கோமோ.. செயற்கை தடுப்பூசி முறையை உலகிற்கு அறிமுகம் செய்த சாதனை விஞ்ஞானி. இன்று உயிரி வேதியியல் துறைக்கு பொறுப்பேற்று உணவு என்பது பதப்படுத்தப்பட்டு நாட்டில் உள்ள அனைவருக்கும் வழங்கப்படுவதில் பங்காற்றும் முக்கிய ஆலைகளை தன் கையில் எடுத்துக் கொண்டு பணி செய்து வருகிறார்.. உலக சாதனை மருத்துவ விஞ்ஞானியாக இருந்தாலும் மக்கள் விஞ்ஞானியாக இருந்து கொண்டிருக்கிறார் பென்கோமா.
சுசேரோ சமிசோமா .. அடிப்படை கட்டமைப்புகளில் மின் மற்றும் சாதனியல் துறையின் முக்கிய பங்கேற்பாளர்.. இன்றைக்கு கியூபாவில் மிகப்பெரிய சிக்கல் மின்சாரத்தை வழங்குவதுதான் ஏனெனில் அவருடைய நாட்டின் மின்சார உற்பத்தியைப் பல இடங்களில் தகர்த்து எறிந்துவிட்டது ஏகாதிபத்தியம்.. இந்த சூழலில் கிடைக்கும் மின்சாரத்தை அவசியமான இடங்களுக்கு அனுப்பிவிட்டு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 5 மணி நேரமாவது எல்லாருக்கும் மின்சாரம் கிடைக்கின்ற அற்புத தானியங்கி சாதனங்களை உருவாக்கிக் கொடுத்திருக்கும் அறிஞர் இவர்.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.. கியூபாவின் மிகப்பெரிய சாதனை தனித்தனி விஞ்ஞானிகளை உருவாக்கியது மட்டுமல்ல. ஒரு விஞ்ஞான சமூகத்தையே கட்டமைத்தது. உலகின் பல நாடுகளில் உள்ள உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானிகள் பலர் இருக்கலாம். ஆனால் கியூபாவில் ஆசிரியர் முதல் மருத்துவர் வரை ஆய்வக விஞ்ஞானி.. விவசாயி.. முதல் வானியலாளர் வரை ஒரு சமூகமே அறிவியல் நலனுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறது.. சிறு நெருக்கடி ஏற்பட்டவுடன் இத்தகைய மா மனிதர்கள் நாட்டை விட்டு ஓடிவிடவில்லை.. மாறாக நிமிர்ந்து நின்று தங்கள் தேசத்தை தோள் கொடுத்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கியூபா எனும் தேசத்தில் வாழும் அனைத்து மக்களூமே அறிவியலாளர்கள் விஞ்ஞானிகள்.. என்றால் நம்ப முடிகிறதா.

மனிதநேயமற்ற அரசியல் தடைகளுக்கு எதிராக அறிவியலை முன்வைத்த நாடு.. பசியை வென்ற ஆய்வகங்கள், அறிவியலையே ஆயுதமாக்கிய நாடு கியூபா.. கியூபாவின் கதை ஒருபோதும் வெல்ல முடியாத புரட்சியின் கதை.. வெத்துவேட்டு வார்த்தைகள் மூலம் சினிமா ரீல்ஸ் புரட்சிகளை கொண்டாடிக் கொண்டிருக்கும் நம் அப்பாவி ஜனங்களுக்கு எப்போது புரிய போகிறது.. வெறும் ஆட்சி மாற்றம் அதிகார மாற்றம்.. முந்தைய ஆட்சி பற்றிய ஆபாச விமர்சனம் என்பது புரட்சி அல்ல.. புரட்சி என்பது சோசலிச சமூகத்தைக் கட்டமைப்பது மற்றும் அது சிதைவடையாமல் தொடர்ந்து அறிவியல் தேசமாக அதை பாதுகாப்பது.

பலஸ்தீனம், காசா, ஈரான்.. என்ற ஒரு புறமும்.. உலகக் கால்பந்து முதல் எப்ஸ்டீன் பைல்ஸ் வரை ஏதேதோ அரசியலை இந்த உலகம் பேசிக்கொண்டு கியூபாவை கைவிட்டது.. இந்த சூழலில் நாம் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்.. அதன் இருப்பிற்காக போராட வேண்டும்.. ஏன் அப்படி செய்ய வேண்டும் என்பதற்கு இந்த புத்தகம் தன்னகத்தே ஆயிரத்திற்கும் மேற்பட்ட காரணங்களை கொண்டுள்ளது.

மாபெரும் புரட்சியாளர்கள் உருவாக்கிய சமூகம் சாதாரண ஆசிரியர்கள் உருவாக்கிய விஞ்ஞானிகளின் கதை கியூபாவின் கதை மருத்துவர்கள் ஆராய்ச்சியாளர்களாக.. மக்கள் தொண்டர்களாக மாறிய அற்புதம் .. நெருக்கடிக்கு நடுவிலும் மெழுகுவர்த்தி ஒளியில் நடக்கும் ஆய்வக வேலை என்பது நாட்டின் வளர்ச்சிக்கான கட்டமைப்பிற்கான பணி ஒரு நாட்டின் உண்மையான செல்வம் அதன் அறிவார்த்த மனிதர்களே என்பதை உலகிற்கு நிரூபிக்கும் கதை கியூபாவின் கதை..

இன்று உலகம் காலநிலை மாற்றம் புதிய தொற்று நோய்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற பெரும் சவால்களை எதிர்கொள்ளும் பொழுது கச்சா எண்ணெய் அரசியலின் மூலம் உலகத்தை சின்னாபின்னப்படுத்தும் வலதுசாரி ரத்த வெறி அரசியலுக்கு எதிராக மக்கள் அறிவியலின் அவசியத்தை அரண்போல் நின்று சவால்களை எதிர்கொண்டு.. வீழ்வேன் என்று நினைத்தாயோ.. என சர்வதேச கோர்ப்பரேட் அரசியல் ஏகாதிபத்திய சதிக்கு எதிராக மார்தட்டும் வரலாற்று தேசம் கியூபா. அதன் மக்கள் அறிவியலிடமிருந்து கற்போம்.

Tags: