மாவோ பாரம்பரியம்: புரட்சிகர சித்தாந்தம், நடைமுறைகளில் இன்றைய பொருத்தப்பாடு!
–பி. வி. ராகவலு (B.V. Raghavalu)

அறிமுகம்
1949 ஆம் ஆண்டின் சோசலிசப் புரட்சிக்குப் பிறகு சீன மக்கள் குடியரசில் ஏற்பட்டுள்ள மகத்தான வளர்ச்சியும் முன்னேற்றமும் உலகம் முழுவதும் உள்ள சோசலிசத்தின் நண்பர்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த சாதனைகள், 1921 இல் தொடங்கப்பட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான புரட்சிகர இயக்கத்தில் வேரூன்றியுள்ளது. மேலும் சீன மக்களையும் நாட்டையும் அரை-நிலப்பிரபுத்துவ மற்றும் அரை-காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து விடுவித்து, சுதந்திரமான, இறையாண்மை கொண்ட, சோசலிச வளர்ச்சிப் பாதைக்கு வழிவகுத்த ‘புதிய ஜனநாயகப் புரட்சி’யின் வெற்றியிலும் வேரூன்றியுள்ளன.
இப்பின்னணியில், மாவோவின் பங்களிப்பு, வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு இடத்தைப் பெறுகிறது. சீன விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு சோதனைகள், சவால்கள் மற்றும் திருப்பங்களை சீனக்கம்யூனிஸ்ட் கட்சி எதிர்கொண்டது. அப்பொழுதும் அதனைத் தொடர்ந்த சோசலிசக் கட்டுமானத்தின் முதல் காலகட்டத்திலும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்திய மாவோவின் பங்களிப்பு, வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. உலக மக்களுக்கான சிறந்த எதிர்காலத்தை விரும்புவோருக்கும், முதலாளித்துவத்தைக் கடந்து, சோசலிசத்தை நோக்கி முன்னேற விழைவோருக்கும், அவரது பங்களிப்புகள் என்றும் நிலைத்திருக்கக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் இன்றைக்கும் பொருத்தப்பாடு உடையதாகவும் திகழ்கின்றன.
அதே வேளையில், அவரது தலைமையின் கீழ் சோசலிசக் கட்டமைப்பை முன்னெடுத்தபோது நிகழ்ந்த தவறுகள் மற்றும் குறைகளிலிருந்தும் நாம் விலைமதிக்கத்தக்க படிப்பினைகளை பெறுகிறோம். இந்த சோசலிச முன்னெடுப்பு என்பது, பின்தங்கிய, பெரும்பாலும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தில் அமலாக்கப்பட்டது என்பது மட்டுமல்ல; கடுமையான வெளிப்பகைச் சூழல் நிலவிய காலத்தில் நடந்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த பின்னணியில், 2026 செப்டம்பர் 9 அன்று வரவிருக்கும் மாவோ மறைவின் 50 ஆவது ஆண்டு நினைவு தினம், அவரது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பை விமர்சனரீதியாக மதிப்பிடுவதற்கு ஒரு பொருத்தமான தருணமாக அமைகிறது.

முக்கிய பங்களிப்புகள்
மாவோவின் முக்கிய பங்களிப்புகளில் பின்வருவன அடங்கும்:
- ஏகாதிபத்தியம் மற்றும் நிலப்பிரபுத்துவத்தின் எஞ்சிய கூறுகள் ஆகியவற்றின் கூட்டு ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் நாடுகளுக்கான ‘புதிய ஜனநாயகப் புரட்சி’ கோட்பாட்டை உருவாக்கியது.
- விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகங்களில் விவசாயிகளிடம் உள்ள புரட்சிகர ஆற்றலை அங்கீகரித்தது
- தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் அணிதிரட்டப்பட்டு அரசியல் ரீதியாக வழிநடத்தப்படும்போது விவசாயிகளே புரட்சியின் முதன்மையான மக்கள் சக்தியாக மாற முடியும் என்பதை நடைமுறை மூலம் நிரூபித்தது;
- புரட்சிகர இராணுவ உத்திகளுக்குப் பங்களித்தது;
- ஐக்கிய முன்னணி குறித்து தொலைநோக்கு உத்தியை வடிவமைத்தது
- முதன்மை எதிரிக்கு எதிராகப் பரந்த கூட்டணிகளை உருவாக்கியது
- அதே சமயத்தில் தொழிலாளி வர்க்கம் மற்றும் அதன் கட்சியின் சுயேச்சையான அரசியல் மற்றும் அமைப்புரீதியான வலிமையைப் பாதுகாத்துக்கொள்வது
- “மாஸ் லைன்” எனப்படும் மக்களுடன் நெருங்கிய தொடர்பை உருவாக்கும் முக்கியத்துவத்தை முன்னெடுத்தது
- இயக்கவியல் ஆய்வு
- சித்தாந்தத்துக்கும் நடைமுறைக்கும் இடையே உள்ள ஒற்றுமைக்கு முக்கியத்துவம்.
இவையெல்லாம் சர்வதேச கம்யூனிஸ்டு இயக்கத்தின் அனுபவத்தை செழுமைப்படுத்தியது.
எனினும், மாவோவின் பங்களிப்புகளைக் கொண்டு மட்டுமே அவரது வரலாற்று மரபை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. குறிப்பாக, அவரது தலைமையின் பிந்தைய காலத்தில் நிகழ்ந்த தவறுகளையும் பிறழ்வுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். மாவோவின் தலைமையின் கீழ் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இழைத்த மிகத் தீவிரமான தவறு ‘கலாச்சாரப் புரட்சி’ (1966–76) ஆகும். மேலும், தனது பிற்காலத்தில் மாவோ சில முக்கிய அரசியல் மற்றும் கோட்பாட்டு ரீதியான தவறுகளையும் செய்தார்; இதில் ‘மூன்று உலகங்கள்’ கோட்பாடும், குறிப்பாக சோவியத் ஒன்றியத்தை ‘சமூக ஏகாதிபத்தியம்’ என்று அவர் வரையறுத்ததும் அடங்கும். இத்தகைய நிலைப்பாடுகள் சர்வதேச கம்யூனிச இயக்கத்திற்குள் தீவிரமான பிளவுகளை ஏற்படுத்தியதுடன், கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் ஒற்றுமையையும் கடுமையாகப் பாதித்தன.
இந்த பரவலான பொதுவான மதிப்பீட்டின் அடிப்படையில், அவரது பங்களிப்பில் நிகழ்காலத்துக்கும் பொருந்தும் சில அம்சங்களை நான் வலியுறுத்தியும் விரிவாக விளக்கவும் விரும்புகிறேன்.

வர்க்கங்களின் பகுப்பாய்வும் ஐக்கிய முன்னணியும்
சீன சமூகத்தில் உள்ள பல்வேறு வர்க்கங்களையும் வர்க்க சக்திகளையும் ஒரு திட்டவட்டமான பகுப்பாய்வு செய்வதற்கு மாவோ கணிசமான முக்கியத்துவம் அளித்தார். அவருடைய “சீன சமூகத்தில் வர்க்கங்களின் பகுப்பாய்வு” (1926) மற்றும் “ஹுனானில் விவசாய இயக்கம் குறித்த ஆய்வு பற்றி ஒரு அறிக்கை” (1927) ஆகியவை இது தொடர்பாக முக்கியமான பங்களிப்புகள் ஆகும். முதல் ஆவணம்
- சீன சமூகத்தில் உள்ள பல்வேறு வர்க்கங்களைப் பகுப்பாய்வு செய்தது.
- அந்த வர்க்கங்களின் மாறுபட்ட நலன்களை அடையாளம் கண்டது
- புரட்சியில் அவற்றின் சாத்தியமான பங்களிப்பை மதிப்பிட்டது.
- நம்பகமான கூட்டாளிகள் யார் என்பதையும், முதன்மைப் புரட்சிகர சக்திகளையும் அடையாளம் காண்பதன் முக்கியத்துவத்தையும் அது நிலைநாட்டியது.
இதேபோல், இரண்டாவது ஆவணம் விவசாயிகளின் புரட்சிகர ஆற்றலை ஆய்வு மூலம் வெளிப்படுத்தியதுடன், சீனப் புரட்சியில் விவசாய இயக்கம் ஒரு தீர்க்கமான சக்தியாக இருந்தது என்றும் வாதிட்டது.
இந்தப் பகுப்பாய்வின் அடிப்படையில், மாவோ ஐக்கிய முன்னணி பற்றிய உத்தியை உருவாக்கினார். முதன்மை எதிரிக்கு எதிராக பரந்த கூட்டணிகளை உருவாக்கினார். அப்படி பரந்த கூட்டணிகளை உருவாக்கும்பொழுது தொழிலாளி வர்க்கம் மற்றும் அதன் கட்சியின் சுயேச்சையான அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான வலிமையைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய தேவையையும் முன்நிறுத்தினார்.
முரண்பாடுகள் குறித்த கோட்பாடும் இயக்கவியல் பகுப்பாய்வும்
இயக்கவியல் குறித்த மாவோவின் எழுத்துக்கள், குறிப்பாக 1937 ஆம் ஆண்டில் எழுதிய “முரண்பாடு குறித்து” என்ற நூல், மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதத்தைப் புரட்சிகர நடைமுறையில் பயன்படுத்துவதற்கான ஒரு முன்னோடி முயற்சியாகும். வளர்ச்சியின் அடிப்படை இயக்க ஆற்றல் முரண்பாடே என்பதை அவர் வலுவாக வலியுறுத்தினார். மேலும், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் தோன்றும் பல்வேறு முரண்பாடுகள் அனைத்தும் ஒரே விதமான முக்கியத்துவம் கொண்டவை அல்ல; அவற்றுள் சில முதன்மையானவை, சில இரண்டாம் நிலையானவை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும் ஒரு முரண்பாட்டில் உள்ள இரு எதிர்மறை அம்சங்களில் ஏதாவது ஒன்று முதன்மை அம்சமாகவும், இன்னொன்று இரண்டாம் நிலை கொண்டதாகவும் இருக்கும் எனவும் வேறுபடுத்தி காட்டினார். சூழ்நிலைகள் மாறும்போது எது முதன்மை முரண்பாடு என்பதும் மாறக்கூடும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். இந்த அணுகுமுறை, மாறிவரும் சூழ்நிலைகளுக்குப் பொதுவான சூத்திரங்களை இயந்திரத்தனமாகப் பயன்படுத்துவதை விட, திட்டவட்டமான பகுப்பாய்வின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது.
இருப்பினும், முரண்பாடுகள் குறித்த அவரது கோட்பாட்டில் ஒரு அம்சம்—அதாவது, குறிப்பிட்ட சூழல்களில், பகைமையற்ற முரண்பாடுகள் பகைமை முரண்பாடுகளாகவும், பகைமை முரண்பாடுகள் பகைமையற்ற முரண்பாடுகளாகவும் மாறக்கூடும் என்ற கருத்து—தவறானதாகவும், தீங்கு விளைவிப்பதாகவும், அமைந்தது. கலாச்சாரப் புரட்சியின் போது, மக்களிடையேயான பகைமையற்ற முரண்பாடுகளும் கட்சிக்குள்ளான கருத்தியல் வேறுபாடுகளும் பகைமை முரண்பாடுகளாக மாறிவிட்டதாகக் கருதப்பட்டதால், அவை தீவிரமான மற்றும் பேரழிவுகரமான விளைவுகளுக்கு வழிவகுத்தன.
இந்தக் கருத்தாக்கம் சீனாவிற்கு அப்பாலும் தாக்கங்களை ஏற்படுத்தியது. நம் நாட்டில், இது பல நக்சலைட் குழுக்களால் இயந்திரத்தனமாகப் பொருள் கொள்ளப்பட்டு, புரட்சிகர அமைப்புகளுக்கு இடையிலான வேறுபாடுகளை பகைமை முரண்பாடுகளாகக் கருதுவதற்கும், அதன் விளைவாக ஒரு அமைப்பை இன்னொரு அமைப்பு எதிரியாக முத்திரை குத்துவதற்கும் ஒரு முக்கிய தத்துவார்த்த நியாயமாகப் பயன்பட்டது.
கோட்பாடு மற்றும் நடைமுறையின் ஒற்றுமை
கோட்பாடு மற்றும் நடைமுறைக்கு இடையிலான ஒற்றுமைக்கும் உறவிற்கும் மாவோ மிகுந்த முக்கியத்துவம் அளித்தார். அவரது படைப்புகளான “நடைமுறை குறித்து” (1937) மற்றும் “நமது கல்வியை சீரமைப்போம்” (1941) ஆகியவை, கோட்பாடு மற்றும் நடைமுறை ஆகிய இரண்டிற்கும் அவர் அளித்த முக்கியத்துவத்தை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. நடைமுறையிலிருந்து தனித்து அறிவு உருவாவதில்லை என்று முதல் கட்டுரை வாதிடுகிறது. புரட்சிகரக் கோட்பாடானது நடைமுறை அனுபவத்திலிருந்து தோன்றி, மீண்டும் நடைமுறைக்குத் திரும்ப வேண்டும்; அங்குதான் அது சோதிக்கப்பட்டு மேலும் வளர்த்தெடுக்கப்படுகிறது. இரண்டாவது கட்டுரை இக்கோட்பாட்டைக் கட்சியின் செயல்பாடுகளுக்குப் பொருத்திப் பார்க்கிறது; அதாவது, கோட்பாட்டு ரீதியான கற்றலை, சீனாவின் யதார்த்த நிலைமைகள் மற்றும் புரட்சிகர நடைமுறை குறித்த ஆய்விலிருந்து பிரித்து வைப்பதை அது எதிர்க்கிறது.
இந்த அணுகுமுறை இரண்டு தவறுகளை எதிர்த்து போராடுவதில் முக்கியத்துவம் பெற்றது. குறிப்பிட்ட நிலைமைகளை ஆராயாமல் மதிப்பீடுகளை இயந்திரத்தனமாகப் பயன்படுத்தும் வறட்டுத்தனத்துக்கு எதிராக மாவோவின் அணுகுமுறை போராடியது. அதேபோல உடனடி அனுபவத்தை மட்டுமே சார்ந்திருந்து கோட்பாட்டுப் பொதுமைப்படுத்தலை புறக்கணிக்கும் பட்டறிவுவாதத்துக்கு எதிராகவும் இது போராடியது.

மக்களுடன் நெருங்கிய தொடர்பு எனும் “மாஸ் லைன்” (Mass Line)
இதனுடன் நெருங்கிய தொடர்புடைய மாவோவின் மற்றொரு பங்களிப்பு ‘மக்களுடன் நெருங்கிய தொடர்பு” என பொருள்படும் மாஸ் லைன்(mass line) எனும் கோட்பாடாகும்; இது “மக்களிடமிருந்து மக்களுக்கே” என சிறப்பாகவும் சுருக்கமாகவும் தொகுக்கப்படுகிறது. கட்சி மக்களிடையே சென்று, அவர்களின் அனுபவங்கள், கோரிக்கைகள் மற்றும் கருத்துகளைப் பெற்று புரிந்துகொண்டு, அவற்றை மார்க்சியப் பகுப்பாய்வின் மூலம் கூட்டிணைத்து அவற்றை அரசியல் திட்டங்களாகவும் செயல்பாட்டு வடிவங்களாகவும் மாற்றியமைக்க வேண்டும். பின்னர் இக்கொள்கைகள் மக்களிடம் மீண்டும் கொண்டு செல்லப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு சோதிக்கப்படும்; அப்போது கிடைக்கும் அனுபவங்கள் மீண்டும் அடுத்த கட்டம் செல்வதற்கு இது உள்ளீடாக பயன்படுத்தப்படும்.
மாவோ தனது “தலைமைத்துவ முறைகள் குறித்த சில கேள்விகள்” (1943) மற்றும் “கூட்டணி அரசாங்கம் குறித்து” (1945) ஆகிய படைப்புகளில் இக்கருத்துகளை விரிவாக விளக்கினார். முதலாவது படைப்பு, “மக்களிடமிருந்து மக்களுக்கு” என்ற தலைமைத்துவ முறையின் செவ்வியல் வடிவத்தை முன்வைக்கிறது. மக்கள் மத்தியில் சிதறிக் கிடக்கும் கருத்துகளைக் கட்சி திரட்டி, அவற்றை மார்க்சியப் பகுப்பாய்வின் மூலம் கூட்டிணைத்து, அரசியல் வழிகாட்டுதலாக மீண்டும் மக்களிடமே கொண்டு சேர்க்கிறது. இரண்டாவது படைப்பு நிர்வாக அல்லது இராணுவ நடவடிக்கைகளை முன்னிறுத்துவதற்குப் பதிலாக, மக்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களைத் திரட்டுவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
இவ்வாறு, ‘மக்களுடன் நெருங்கிய தொடர்பு’ (mass line) என்பது புரட்சிகரத் தலைமையையும் மக்களின் தீவிரப் பங்கேற்பையும் இணைக்கவும், கட்சி மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போவதைத் தடுக்கவும் முயன்றது. மேலும், மார்க்சியக் கோட்பாட்டை மக்களின் வாழ்வியல் அனுபவங்கள் மற்றும் போராட்டங்களுடன் ஒருங்கிணைப்பதற்கான ஒரு முயற்சியை பிரதிநித்தப்படுத்துவதாகவும் இது அமைந்திருந்தது.

சரியான அரசியல் நிலைபாடுக்கான போராட்டம்: வலது மற்றும் “இடது” திரிபுகள்
மக்களுடன் நெருங்கிய தொடர்பு எனும் மாஸ் லைன் எனப்படும் பிரச்சனை, சரியான அரசியல் நிலைபாடுக்கான பரந்த போராட்டத்துடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. ஒரு புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சிக்கு, சரியான அரசியல் பாதையைக் கண்டறிவது ஒரு தொடர்ச்சியான சவாலாகும். வர்க்கப் போராட்டத்தின் மாறிவரும் சூழல்கள் “வலது” மற்றும் “இடது” ஆகிய இரண்டு திரிபுகளுக்கும் வழிவகுக்கக்கூடும். அந்நிய வர்க்க அழுத்தங்களின் தாக்கத்தால் இந்த திரிபுகள் கட்சிக்குள் உருவாகின்றன. எனவே உட்கட்சி விவாதங்கள் மூலமும் திட்டவட்டமான சூழல் குறித்து திடவட்டமான ஆய்வுகள் மூலமாகவும் நமது மதிப்பீடுகளை நடைமுறையில் சோதிக்கும் தொடர் நடவடிக்கைகள் மூலமும் சரியான அரசியல் நிலைபாடு பரிணமிக்க வேண்டும். முக்கியமான தருணங்களில், வலதுசாரி சந்தர்ப்பவாதத்தையும் “இடது” சீர்குலைவுவாதத்தையும் எதிர்கொண்டு அவற்றை முறியடிக்க சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு உதவியது மாவோவின் மிக முக்கியப் பங்களிப்பாகும்.
உண்மையில், 1949-க்கு முந்தைய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு, இந்த திரிபுகளுக்கு எதிரான ஒரு தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சியாங்கே ஷேக் தலைமையிலான கொமிண்டாங்குடன் (KMT) முதல் ஐக்கிய முன்னணியின்போது அப்போதைய கட்சியின் பொது செயலாளர் சென் டுக்சியு என்பவருடன் தொடர்புடைய முதல் பெரிய வலதுசாரி திரிபு, கொமிண்டாங்கை அதீதமாகச் சார்ந்திருப்பதற்கும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளிடையே போதுமான சுயேச்சையான அமைப்பு இல்லாததற்கும் வழிவகுத்தது. 1927-இல் கம்யூனிஸ்டுகள் மீது கொமிண்டாங் அடக்குமுறைகளை ஏவியது என்பது இந்த பலவீனங்களை வெளிப்படுத்தியது. (இந்த அடக்குமுறை காரணமாக ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்டு ஊழியர்கள் கொல்லப்பட்டனர்- மொழிபெயர்ப்பாளர்)
1927 வலதுசாரி திரிபுக்கு பின்னர் அதன் நேர் எதிர் நிலைபாடான இடதுசாரி திரிபுக்கு கட்சி பயணித்தது. 1930 இல் லி லிசான் எனும் தலைவரின் அரசியல் நிலைபாடு உடனடி புரட்சிகர சாத்தியக்கூறுகள் குறித்து அதீத மதிப்பீடு செய்தது. பெரிய அளவிலான நகர்ப்புறக் கிளர்ச்சிகளையும் நகரங்களை விரைவாகக் கைப்பற்றுவதையும் அந்த நிலைபாடு முன்வைத்தது. அதற்கு மாறாக, மாவோ நீடித்த போராட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் புரட்சிகர வலிமையைக் கட்டியெழுப்பும் உத்தியை உருவாக்கினார்.
இதனைத் தொடர்ந்து, 1931-34 காலகட்டத்தில் வாங் மிங் மற்றும் “28 போல்ஷ்விக்குகளின்” தலைமையில் மேலும் தீவீரமான இடதுசாரி திரிபு நிலை உருவானது. அவர்களின் அணுகுமுறை மாவோவின் கிராமப்புற உத்தியை விமர்சித்ததுடன், வழக்கமான இராணுவ முறைகளையும் பெரிதும் நம்பியிருந்தது. ஐந்தாவது முற்றுகைப் போரின்போது, இந்த முறைகள் கடுமையான தோல்விகளுக்கு வழிவகுத்தன. இதனால், செம்படை தனது ஜியாங்சி தளத்தைக் கைவிட்டு, நெடுந்தூரப் பயணத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1935-இல் நடந்த சுன்யி மாநாடு கட்சியைச் சரியான பாதையில் செலுத்துவதில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. இந்த மாநாட்டில்தான் சீனாவின் திட்டவட்ட நடைமுறைச் சூழல்களுக்கு ஏற்ப மார்க்சியத்தை பொருத்த வேண்டும் என்ற மாவோவின் நீண்ட கால உத்திசார் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பின்னர், ஜப்பானிய எதிர்ப்புப் போரின் போது, கொமிங்டாங் கட்சியிடம் அளவுக்கு மீறி சமரசம் செய்து கொள்வதை மாவோ எதிர்த்தார். அதே சமயத்தில் இடதுசாரி திரிபின் அடிப்படையில் ஜப்பானிய ஏகாதிபத்திய எதிர்ப்பு போரில் கொமிங்டாங் கட்சியுடன் எந்த உறவும் இல்லை எனும் நிலைபாட்டையும் எதிர்த்தார். அவர் “போராட்டத்துடன் கூடிய ஒற்றுமை”யை ஆதரித்தார்—அதாவது, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சுயேச்சையான அமைப்பு, அரசியல் திட்டம் மற்றும் மக்கள் தளம் ஆகியவற்றைப் பேணிக்கொண்டே, ஜப்பானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கொமிண்டாங்குடன் ஒத்துழைப்பதாகும். 1945-க்குப் பிறகான நிலச் சீர்திருத்தம் மற்றும் உள்நாட்டுப் போரின் போது, கட்சி “வலது” மற்றும் “இடது” ஆகிய இரு தரப்புத் தவறுகளையும் தொடர்ந்து சரிசெய்தது: ஒருபுறம் நிலப்பிரபுக்கள் மற்றும் செல்வந்த விவசாயிகளுடன் அதிகப்படியான சமரசம் செய்துகொள்வது எனும் வலது திரிபு, மறுபுறம் நடுத்தர விவசாயிகள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்துவது எனும் இடது திரிபு ஆகிய இரு தவறுகளுக்கு எதிராகவும் மாவோ தொடர்ந்து போராடினார். மார்க்சிய கோட்பாடுகளை வெறும் சூத்திரங்களாக மாற்றி இயந்திரத்தனமாகப் பயன்படுத்தாமல். திட்டவட்டமான ஆய்வுகள் மூலமே வர்க்க வேறுபாட்டை மதிப்பிட வேண்டும் என்று மாவோ வலியுறுத்தினார்.

நெறிப்படுத்துதல் மூலம் புரட்சிகர கட்சியை வலுப்படுத்துதல்
இந்த வலது மற்றும் இடது திரிபுகளுக்கு எதிரான போராட்டம், கட்சி நெறிப்படுத்த வேண்டிய முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது. 1949 புரட்சிக்கு முன்பு, சீன கம்யூனிஸ்ட் கட்சி, கோட்பாடு, அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான பலவீனங்களைச் சரிசெய்யவும், கட்டுப்பாடை வலுப்படுத்தவும், புரட்சிகர போராட்டத்தை வழிநடத்தும் தனது திறனை மேம்படுத்தவும் பல செயல்முறைகளை மேற்கொண்டது.
இந்த அம்சத்தில் “குட்டியான்” மாநாடு (1929) ஒரு முக்கியமான ஆரம்பகால முன்னோடியாகும். இது இராணுவவாதம், தனிநபர்வாதம், கட்டளைவாதம் மற்றும் போதிய அரசியல் கல்வியின்மை ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டது. மேலும் இராணுவம் கட்சியின் அரசியல் தலைமையின் கீழ் இயங்க வேண்டும்; புரட்சியின் நோக்கங்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்தியது.
எனினும், 1949-க்கு முந்தைய மிக முக்கியமான அனுபவம் “யானான்’ சீர்திருத்த இயக்கம் (1942–44) ஆகும். அது மூன்று முக்கியப் பிரச்சினைகளைக் குறிவைத்தது:
1. அகநிலைவாதம் – வறட்டுவாதம் மற்றும் திடவட்டமான சூழலுடன் தொடர்பில்லாமல் இருப்பது உட்பட.
2. செக்டேரியனிசம் எனப்படும் குழுவாதம்- கோஷ்டிப்போக்கு மற்றும் கூட்டு செயல்முறையை புறக்கணித்தல் உட்பட.
3. கீறல் விழுந்த ரிக்கார்டு போல ஒரே மாதிரியான கட்சி ஆவணங்கள் எழுதுவது மற்றும் சம்பிரதாய வாதம்.
ஆய்வு, விசாரணை, திறனாய்வு மற்றும் விமர்சனம்- சுயவிமர்சனம் ஆகியவற்றின் மூலம், அது மார்க்சியம்-லெனினிசத்தை சீனாவின் திட்டவட்டமான நிலைமைகளுடன் பொருத்தவும், கட்சியின் தலைமைக்கும் மக்களுக்கும் இடையே தொடர்புகளை வலுப்படுத்தவும் முயன்றது.
இச்செயல்முறையின் ஒரு பகுதியாக, கட்சித் தொண்டர்கள் மார்க்சியம்-லெனினியம், புரட்சிகர வரலாறு மற்றும் கட்சியின் அனுபவங்கள் ஆகியவற்றைக் கற்றறிந்ததோடு, தங்கள் சொந்தக் குறைபாடுகளையும் தவறுகளையும் விமர்சனபூர்வமாக ஆய்வு செய்தனர். இந்த கால கட்டத்தில் மாவோ எழுதிய ‘நமது ஆய்வை நெறிப்படுத்துதல்’, ‘கட்சியின் பணிப் பாணியைச் சரிசெய்தல்’, ‘கட்சியின் மாறாத ஒரே முறையிலான எழுத்துமுறையை எதிர்த்தல்’, ‘கட்சியின் பணிப் பாணியையும் சிந்தனையையும் மேம்படுத்துதல்’ போன்ற படைப்புகள் இச்செயல்முறைக்கு முக்கியமான கோட்பாட்டு மற்றும் நடைமுறை வழிகாட்டலை வழங்கின.
நெறிபடுத்தும் செயல்முறை நடைமுறைப் பணிகளில் தொடர்ந்தது. 1946-48 ஆம் ஆண்டு நிலச் சீர்திருத்தம் மற்றும் மீண்டும் தொடங்கிய உள்நாட்டுப் போரின்போதும், நெறிபடுத்தும் செயல்முறை என்பது நடைமுறைப் பணிகளுடனே இணைந்திருந்தது. அதிகார மனோபாவம், கட்டளைவாதம், ஊழல், பலவீனமான மக்கள் தொடர்பு மற்றும் நிலச் சீர்திருத்தத்தைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட தவறுகளுக்காகப் ஊழியர்கள் விமர்சிக்கப்பட்டனர். உள்ளூர் நிலைமைகளை ஆராய்வதற்கும், விவசாயிகளிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும், நடைமுறையின் மூலம் கொள்கைகளைச் சரிசெய்வதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
இவை அனைத்தும் ஒன்றிணைந்து, நீண்ட காலப் புரட்சிகரப் போராட்டத்தை வழிநடத்தக்கூடிய ஆற்றல் கொண்ட, அரசியல் ரீதியாக ஒன்றிணைந்த, சித்தாந்த ரீதியாகப் பயிற்றுவிக்கப்பட்ட, அமைப்பு ரீதியாகக் கட்டுக்கோப்பான ஒரு கட்சியை உருவாக்க உதவின.

சோசலிச நிர்மாணம்
புரட்சிகர வெற்றிக்குப் பிறகு, தலைவர் மாவோ தலைமையிலான மக்கள் ஜனநாயக அரசாங்கத்தின் கீழ் சோசலிசக் கட்டமைப்பை உருவாக்கும் மாபெரும் பணி மேற்கொள்ளப்பட்டது. 1949 முதல் 1978 வரை சோசலிச நிர்மாணம் பல சாதனைகளை எட்டியது. போரினால் சிதைந்து வறுமையில் உழன்ற ஒரு விவசாயப் பொருளாதார நாடாக இருந்த சீனா, வலுவான தொழில், விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு அடித்தளம் கொண்ட நாடாக உருமாறியது. அரசுத் திட்டமிடல், நிலச் சீர்திருத்தம் மற்றும் கூட்டுறவு முறை (collectivisation) ஆகியவை செயல்படுத்தப்பட்டன. எஃகு, நிலக்கரி, மின்சாரம், இயந்திரங்கள், இரசாயனங்கள், போக்குவரத்து, நீர்ப்பாசனம், பிற அடிப்படை உள்கட்டமைப்புத் துறைகளில் பெரும் முன்னேற்றங்கள் எட்டப்பட்டன. சுகாதாரம், கல்வி, சமூக நலன் ஆகியவற்றிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டது. 1950 இல் சுமார் 36 ஆண்டுகளாக இருந்த சராசரி ஆயுட்காலம், 1970-களின் பிற்பகுதியில் சுமார் 64–66 ஆண்டுகளாக உயர்ந்தது; எழுத்தறிவு கணிசமாக அதிகரித்தது; கிராமப்புற சுகாதாரம், தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவ வசதிகள் விரிவுபடுத்தப்பட்டன; மேலும் பெண்களின் சட்டபூர்வ மற்றும் சமூக நிலை முன்னேற்றம் கண்டது. சீனா முக்கிய அறிவியியல் மற்றும் தொழில்நுட்ப திறன்களையும் உருவாக்கியது. பொருளாதார ரீதியாக வலுவான சுயசார்பை சாதித்தது.
சீனப்புரட்சியின் முதல் இருபது ஆண்டுகளில் சாதிக்கப்பட்ட முக்கியமான அடித்தளங்கள் இல்லாமல் இருந்திருந்தால் சீனாவின் பிற்கால விரைவான மற்றும் பரந்த அளவிலான வளர்ச்சி சாத்தியமாகியிருக்காது; மேலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால் தொடங்கப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களும் இன்று எட்டியுள்ள மகத்தான சாதனைகளை எட்டியிருக்காது.
எனினும், இச்சாதனைகளுடன் கடுமையான பின்னடைவுகளும் ஏற்பட்டன. ‘பெரும் முன்னோக்கிய பாய்ச்சல்’ (Great Leap Forward 1958–60) நடவடிக்கை கடுமையான பொருளாதார, சமூக நெருக்கடியை உருவாக்கியது; அதேவேளையில், ‘கலாச்சாரப் புரட்சி’ (1966–76) கல்வி, உற்பத்தி, நிர்வாகம் மட்டுமல்லாது, கட்சி மற்றும் அரசின் செயல்பாடுகளிலும் பரவலான சிதைவுகளை ஏற்படுத்தியது. இவ்விரு நிகழ்வுகளும் தவிர்க்கப்பட்டிருந்தாலோ, அல்லது அவற்றின் கால அளவும் தாக்கமும் கணிசமாகக் குறைக்கப்பட்டிருந்தாலோ, சோசலிசக் கட்டமைப்புப் பணிகள் இன்னும் வெகுதூரம் முன்னேறியிருக்கக்கூடும்.

சீர்திருத்தங்களுக்குப் பிந்தைய சீனாவின் வளர்ச்சி
1978-க்கு முன் அமைக்கப்பட்ட அடித்தளங்கள், பிற்காலத்தில் சோசலிச சீனாவின் மகத்தான முன்னேற்றத்துக்கு ஒரு முக்கிய அடிப்படையாக அமைந்தன. 2025 ஆம் ஆண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) சுமார் 18.7 டிரில்லியன் டொலராகவும், தனிநபர் சராசரி உள்நாட்டு உற்பத்தி சுமார் 13,300 டொலராகவும் உயர்ந்தது. அந்நாட்டின் சராசரி ஆயுட்காலம் சுமார் 78 ஆண்டுகளாக அதிகரித்தது; அத்துடன் ஐ.நா. கணக்கிடும் மனித மேம்பாட்டுக் குறியீடு (HDI) 0.797 என எட்டியது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு தேசத்துக்கு இது சாதாரண சாதனை அல்ல. சீனா, தீவிர வறுமையை முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைத்தது. தற்போது அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக சீனா திகழ்கிறது. பல்வேறு துறைகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களில் உலகளாவிய அளவில் முதன்மை இடத்திலோ அல்லது முக்கியப் போட்டியாளராகவோ உருவெடுத்துள்ளது.
ஒட்டுமொத்த மதிப்பீடு
தொகுத்து சொல்வது எனில், சீனப் புரட்சியின் போதும், அதனைத் தொடர்ந்த சோசலிச நிர்மாண காலகட்டத்திலும், மார்க்சியத்தின் வளர்ச்சிக்கு மாவோ முக்கியமான கோட்பாட்டு மற்றும் நடைமுறைப் பங்களிப்புகளை வழங்கினார். இந்தப் பங்களிப்புகளில் பல, சீனாவிற்கு அப்பாலும் முக்கியத்துவம் பெற்றன; குறிப்பாக, பெரும்பாலும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட, முன்னர் காலனித்துவ அல்லது அரை-காலனித்துவ சமூகங்களில் இருந்த புரட்சிகர இயக்கங்களுக்கு அவை முக்கியத்துவம் பெற்றன.
தமிழில்: அன்வர் உசேன்