டொலருக்கு ‘செக்’, ஐ.நா.-வுக்கு எச்சரிக்கை! பிரிக்ஸ் மாநாட்டின் டெல்லி பிரகடன முக்கிய அம்சங்கள்!!
-க.போத்தி ராஜ்

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 2 நாட்கள் நடைபெறும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் தொடக்க நாளான சனிக்கிழமை (12.09.2026) பிரிக்ஸ் நாடுகள் இணைந்து ‘புதுடெல்லி பிரகடனத்தை’ ஒருமித்த குரலில் அறிவித்தன.
புதுடெல்லி பிரகடனத்தின்படி, ‘மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம், காசாவில் போர் நிறுத்த முடிவை மதிக்க வேண்டும், பலஸ்தீன மக்களின் உரிமை மதிக்கப்பட வேண்டும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும், கடலில் செல்லும் சரக்குக் கப்பல்களுக்கும் மாலுமிகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கட்டமைப்பு ரீதியான திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்’ உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாகக் கொண்டுவரப்பட்டன.
பிரிக்ஸ் மாநாட்டின் முதல் நாளில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பிரிக்ஸ் அமைப்புக்கான இந்தியாவின் தலைமைத்துவம், மக்கள் மைய மற்றும் மனிதாபிமானம் சார்ந்த அணுகுமுறையைக் கொண்டுள்ளது. மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவை எங்களின் முன்னுரிமைகளாக இருக்கின்றன” என்று தெரிவித்தார்.
திருக்குறள் – ராமேஸ்வரம் திருக்கோயில்:
18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லி பாரத் மண்டபத்தில் தொடங்கியது. 2 நாட்கள் நடக்கும் இம்மாநாட்டின் தொடக்க நாளில், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்களைப் பிரதமர் மோடி வரவேற்றார். பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புட்டினை வரவேற்றபோது, அவருக்கு ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலைப் பரிசாக அளித்தார்.
சனிக்கிழமை (12.09.2026) பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களைப் பிரதமர் மோடி வரவேற்றபோது, அவருக்குப் பின்னால் புகழ்பெற்ற ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி கோயில் கோபுரத்தின் படம் பின்னணியாக அமைக்கப்பட்டிருந்தது.

உலகத் தலைவர்களுடன் சந்திப்பு
எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலி, மலேசிய பிரதமர் அன்வர் பின் இப்ராஹிம், வியட்நாம் பிரதமர் பாம் மின் சின், ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசர் ஷேக் காலீத் பின் முகமது, சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் தனித்தனியே பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
எத்தியோப்பியா பிரதமருடன் சந்திப்பு:
பிரிக்ஸ் மாநாட்டின் முதல் நாளில், எத்தியோப்பியக் கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசின் பிரதமர் அபி அகமது அலியும் பிரதமர் மோடியும் சந்தித்துப் பேசினர். இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இரு தலைவர்களும் பேசினர் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்பு, மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இரு தலைவர்களும் பகிர்ந்துகொண்டனர். 2025 ஆம் ஆண்டு டிசம்பரில் பிரதமர் மோடி அடிஸ் அபாபாவிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை மேற்கொண்டார். அந்தப் பயணத்தின் தொடர்ச்சியாக எத்தியோப்பியா பிரதமர் இன்று இதில் பங்கேற்றார்.
இரு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் குறித்துக் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர். மேலும், பலதரப்பட்ட விவகாரங்களில் எத்தியோப்பியாவுக்கு இந்தியா ஒத்துழைப்பு அளிக்கும் என்பதைப் பிரதமர் மோடி உறுதிப்படுத்தினார். இந்த மாநாட்டில் பங்கேற்றதற்காக எத்தியோப்பியா பிரதமருக்குப் பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்தார்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
கோட்டா கினபாலுவில் இந்தியத் தூதரகம்:
மலேசிய பிரதமர் அன்வர் பின் இப்ராஹிமுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். அது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘சபாவின் கோட்டா கினபாலுவில் (Kota Kinabalu) இந்தியாவின் துணைத் தூதரகத்தை அமைக்க மலேசியாவின் ஒப்புதலைப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார். ஆசியான்-இந்தியா உறவுகளை வலுப்படுத்துவதில் மலேசியா அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவைப் பிரதமர் மோடி பாராட்டினார்.
பரஸ்பர நலன் சார்ந்த முக்கிய பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இந்தியா – மலேசியா இடையிலான விரிவான ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதில் தங்கள் தொடர்ச்சியான உறுதியை இரு தலைவர்களும் வெளிப்படுத்தினர்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

ஒடிசாவில் அலுமினியத் திட்டம்:
ஐக்கிய அரபு இராச்சியத்தின் பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமதுவுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். அப்போது இரு தலைவர்களும் பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்துப் பேசினர்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், ‘பல்வேறு துறைகளிலும் பரந்த அளவில் இருதரப்பு உறவுகளில் எட்டப்பட்ட முன்னேற்றத்தை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இந்தியாவில் மிகப் பெரிய அளவில், ஒடிசாவில் 11.5 பில்லியன் டொலர் மதிப்பில் ஒருங்கிணைந்த கிரீன்ஃபீல்ட் அலுமினியத் திட்டத்தின் வளர்ச்சியில் முதலீடு செய்ய ஐக்கிய அரபு இராச்சியத்தின் இன்டர்நேஷனல் ஹோல்டிங் நிறுவனம் முன்வந்துள்ள அறிவிப்பை அவர்கள் வெளியிட்டனர்.
இந்தியாவின் தலைமைத்துவத்தின் போது பிரிக்ஸ் அமைப்பில் ஏற்பட்ட நேர்மறையான மாற்றங்களை இரு தலைவர்களும் வரவேற்றனர். மேலும், இரு நாடுகளும் பிரிக்ஸ் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும், இத்தளத்தின் மூலம் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றுவதற்கும் ஒப்புக்கொண்டன’ என்று தெரிவிக்கப்பட்டது.
நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல:
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசும்போது, “2026-ஆம் ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியாவின் தலைமைத்துவம், மக்கள் மைய மற்றும் மனிதாபிமானம் சார்ந்த அணுகுமுறையைக் கொண்டுள்ளது. மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவை எங்களின் முன்னுரிமைகளாக இருந்து வருகின்றன.
இந்த முன்னுரிமைகளின் அடிப்படையில், பிரிக்ஸ் அமைப்பின் ஒத்துழைப்பைச் சாதாரண மக்களுடன் இணைப்பதற்கு நாங்கள் சிறப்பு முக்கியத்துவம் அளித்துள்ளோம். இந்த அணுகுமுறையின் மூலம், சுமார் 30 நகரங்களில் 350-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் வாயிலாக உங்கள் குழுக்களை இந்தியாவில் வரவேற்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.
இந்த ஆண்டு நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாடு வரலாற்றுச் சிறப்புமிக்கது. இது பிரிக்ஸ் அமைப்பின் 20-வது ஆண்டு நிறைவு விழாவாகும். ஒருவரின் வாழ்க்கையில், இளமைக்காலக் கனவுகளுடன் பொறுப்புகளும் இணையும் காலகட்டம் இது.
நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல; மாறாக, அனைவருடனும் இணைந்து முன்னேறும் சிந்தனையுடனேயே செயல்படுகிறோம். அடுத்த 20 ஆண்டுகளில், புதிய மற்றும் லட்சியம் கொண்ட ஒரு செயல்திட்டத்தின் அடிப்படையில் நாம் பணியாற்ற வேண்டும்.
இதற்கான தொடக்கத்தை நமது சொந்தச் செயல்பாட்டு முறைகளிலிருந்தே நாம் மேற்கொள்ள வேண்டும். பிரிக்ஸ் தலைமைத்துவம் ஒவ்வொரு ஆண்டும் மாறினாலும், அமைப்பின் செயல்பாட்டு வேகம் குறையக்கூடாது.
அடுத்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்குள் ‘பிரிக்ஸ் சீர்திருத்த வழிகாட்டி வரைபடமாக’ மாறக்கூடிய 10 உலகளாவிய ஆளுமைச் சீர்திருத்த முன்மொழிவுகளை நாம் இணைந்து உருவாக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தவரை, ஐ.நா. சீர்திருத்தங்களை இனிமேலும் தாமதிக்க முடியாது.
இன்று, உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொள்வதில் ‘உலகளாவிய தெற்கு’ (Global South) நாடுகள் முன்னணியில் உள்ளன. ஆனால், முடிவெடுக்கும் செயல்பாட்டிலோ அவை பின்னணியில் உள்ளன. இந்தச் ‘சலுகை பெறும் நிலயிலிருந்து’, ‘கூட்டாகச் சேர்ந்துமுடிவு எடுக்கும்’ இடத்திற்கு நாம் மாற வேண்டும்.
அத்தகைய தளத்தில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு குரல் இருக்கும், ஒவ்வொரு உறுப்பினருக்கும் அதில் பங்கு இருக்கும். மேலும், மனிதகுலத்தின் வளர்ச்சியே ஒவ்வொரு முயற்சியின் மையமாகவும் இருக்கும்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதுடெல்லி பிரகடனம் அம்சங்கள் என்ன?
காசா போர் நிறுத்தம், வரிவிதிப்புக்குக் கண்டனம் பிரிக்ஸ் மாநாட்டின் முதல் நாள் முடிவில் உறுப்பு நாடுகள் இணைந்து புதுடெல்லி பிரகடனத்தைக் கூட்டாக வெளியிட்டன. பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் ‘புதுடெல்லி பிரகடனம்’ ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:
ஐ.நா. சீர்திருத்தங்கள்:
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) கட்டமைப்பு மாற்றம் உட்பட பல்வேறு உலகளாவிய அமைப்புகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பிரேசில், இந்தியாவுக்கு ஆதரவு:
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பெரிய அளவிலான பங்களிப்பை வழங்குவதற்கும், அவற்றின் விருப்பங்களுக்கும் நிரந்தர உறுப்பு நாடுகளான சீனாவும் ரஷ்யாவும் மீண்டும் ஆதரவு தெரிவித்தன.
உள்நாட்டுச் செலாவணியில் வர்த்தகம்:
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வகையில், பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் அமெரிக்க டொலருக்குப் பதிலாக, உறுப்பு நாடுகளின் உள்நாட்டுச் செலாவணியில் (Local Currencies) அதிகளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்துக்கு கண்டனம்:
2025 ஆம் ஆண்டு, ஏப்ரல் 22 ஆம் திகதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. எல்லை தாண்டிய பயங்கரவாதம், நிதி உதவி மற்றும் புகலிடங்களை ஒழிப்பதில் உள்ள உறுதியைப் பிரிக்ஸ் நாடுகள் மீண்டும் வலியுறுத்தின.
மத்திய கிழக்கு மோதல் – கடல்சார் பாதுகாப்பு:
மத்திய கிழக்கில் நடைபெறும் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் மேலைநாடுகளின் போர் நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மத்திய கிழக்குக் கடற்பகுதியில் செல்லும் சரக்குக் கப்பல்கள், மாலுமிகள் மற்றும் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.
உலக வர்த்தக அமைப்பு சீர்திருத்தங்கள்:
திறந்த, வெளிப்படையான மற்றும் சமத்துவமான உலகளாவிய வர்த்தக முறைக்குப் பிரிக்ஸ் நாடுகள் ஆதரவு தெரிவிக்கும். அதேசமயம், தன்னிச்சையான வரி உயர்வு, பாதுகாப்புவாதம் (Protectionism) மற்றும் உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்குப் புறம்பான நடவடிக்கைகளால் உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிக்கப்படுகிறது என்றும் கவலை தெரிவிக்கப்பட்டது.
காசா போர் நிறுத்தத்தை மதியுங்கள்:
ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானம் 2803-ன் படி ஐ.நா. மற்றும் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களைச் செயல்படுத்த வேண்டும். காசா பகுதியில் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுப் பின்பற்றப்பட வேண்டும்; முழுமையான மற்றும் தடையற்ற மனிதாபிமான உதவிகள் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
பலஸ்தீன மக்கள் உரிமை:
காசா பகுதியிலிருந்து பலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதை நிறுத்த வேண்டும் எனப் பிரிக்ஸ் நாடுகள் வலியுறுத்துகின்றன. பலஸ்தீன மக்களின் பிரிக்க முடியாத உரிமைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மற்றும் ஆக்கிரமிப்பைச் சட்டப்பூர்வமாக்கவோ அல்லது நீட்டிக்கவோ கூடிய ஏற்பாடுகள் தேவையற்றவை.
அமைதியான வழிமுறை:
இஸ்ரேல் – பலஸ்தீன மோதலுக்கு நியாயமான மற்றும் நீடித்த தீர்வை அமைதியான வழியில் மட்டுமே அடைய முடியும். பலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் தாயகம் திரும்புவதற்கான உரிமை உள்ளிட்டவை நிறைவேற்றப்படுவதை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். இவ்வாறு டெல்லி பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
-இந்து தமிழ்
2026.09.12